"கொள்முதல் நிலையம் துவங்காததால் காவூரில் விவசாயிகள் கவலை"

உத்திரமேரூர் வட்டாரத்தின் பல்வேறு பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டும், காவூரில் திறக்கப்படவில்லை.

Update: 2024-04-05 06:14 GMT

விவசாயி

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், காவூர் கிராமத்தைச் சுற்றி ஒரக்காட்டுப்பேட்டை, காவியத்தண்டலம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. பாலாற்றங்கரையொட்டி உள்ள இந்த கிராமங்களில், நெல் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதி விவசாயிகள் கடந்த ஆண்டுகளில், 10 கி.மீ., துாரத்தில் உள்ள பிலாப்பூர் மற்றும் களியப்பேட்டை ஆகிய பகுதிகளில் இயங்கும் நெல் கொள்முதல் நிலையங்களில் தங்கள் நெல்லை விற்பனை செய்து வந்தனர். இதனிடையே, கடந்த ஆண்டு காவூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இதனால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நடப்பாண்டில், உத்திரமேரூர் வட்டாரத்தின் பல்வேறு பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டும், காவூரில் திறக்கப்படவில்லை. இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: காவூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் சம்பா பருவ சாகுபடிக்கு 500க்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் நெல் பயிரிட்டு தற்போது, அறுவடை பணிகளை துவக்கி உள்ளோம். காவூரில் கடந்த ஆண்டு, நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டதால், சிரமமின்றி நெல் கொள்முதல் செய்தோம். ஆனால், இந்த ஆண்டுக்கு அனுமதி கிடைக்காததால், அறுவடை செய்த நெல்லை வீடுகள் மற்றும் நெற்களங்களில் குவித்து வைத்துள்ளோம். எனவே, காவூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவங்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்."
Tags:    

Similar News