சரக்கு வாகனம் மோதியதில் தந்தை, மகன் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் பகுதியில் சரக்கு வாகனம் மோதியதில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-06-13 13:31 GMT

விபத்து 

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே சரக்கு வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தையும் மகனும் உயிரிழந்தனர். கீரனூர் அருகே உள்ள கல்லுகுமியல்பட்டியைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் பன்னீர்செல்வம் (45). இவருடைய மகன் சந்தோஷ் (14). இவர் கீரனூரில் உள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார்.

புதன்கிழமை மாலை தந்தை பன்னீர்செல்வமும், மகன் சந்தோஷும் இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து கீரனூருக்கு திருச்சி-காரைக்குடிதேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளனர். இவர்கள் சென்ற வாகனம் இளையவயல் பிரிவு சாலை பகுதியில் சென்றபோது எதிரே வந்த சரக்கு வாகனம் (டாடா ஏஸ்) எதிர்பாராதவிதமாக இரு சக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது.

இதில் பலத்த காயமடைந்த பன்னீர்செல்வம், சந்தோஷ் இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த கீரனூர் போலீஸார், இருவரின் உடல்களையும் மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.மேலும், சரக்கு வாகன ஓட்டுநர் கொத்தகம் பகுதியைச் சேர்ந்த அறிவழகனை (24) போலீஸார் கைது செய்தனர்.

Tags:    

Similar News