கழனிவாசல் அங்காடியில் தீ விபத்து

கழனிவாசல் அங்காடியில் தீ விபத்து ஏற்பட்டது

Update: 2024-04-02 17:05 GMT
தீயில் எரிந்த சாக்குகள்

தஞ்சை மாவட்டம்,  சேதுபாவாசத்திரம் ஒன்றியம், கழனிவாசல் பொது விநியோகத் திட்ட அங்காடியில், திங்கள்கிழமை இரவில் ஏற்பட்ட தீ விபத்தில் சணல் சாக்குகள், அரிசி, சீனி மூட்டைகள் தீயில் எரிந்து நாசமானது.

ரெட்டவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தைச் சேர்ந்த, கழனிவாசல் கிராமத்தில் சாலையோரம் உள்ள பூட்டியிருந்த பொது விநியோகத் திட்ட அங்காடியில், திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு அங்காடியிலிருந்து புகை வெளியானதைத் பார்த்த மக்கள் பேராவூரணி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

உடனடியாக தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன், தீயணைப்பு வீரர் சுப்பையன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் அங்காடியில் இருப்பு வைக்கப்பட்டு இருந்த 2,500க்கும் மேற்பட்ட காலியான சணல் சாக்குகள், 55 மூட்டை அரிசி, 5 மூட்டை சீனி, 100 கிலோ பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.  அருகில் உள்ள மற்றொரு கட்டிடத்தில் மண்ணெண்ணெய் இருப்பு வைக்கப்பட்டிருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.  மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.  தீ விபத்து குறித்து அங்காடி விற்பனையாளர் ஆறுமுகம் வருவாய்த்துறை, வட்ட வழங்கல் துறை, கூட்டுறவுத் துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து,

காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்தை பொதுவிநியோகத் திட்ட கூட்டுறவு சார்பதிவாளர் ரமேஷ்குமார், ரெட்டவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளர் ( பொ) தெட்சிணாமூர்த்தி ஆகியோர் நேரில் பார்வையிட்டு சேதம் குறித்து ஆய்வு செய்தனர்.  தொடர்ந்து தீ விபத்து குறித்து பேராவூரணி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் .

Tags:    

Similar News