துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்
படைக்கலன் உரிமம் பெற்றவர்கள் துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
படைக்கலன் உரிமம் பெற்றவர்கள் துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்தல் ஆணையத்தால் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973 பிரிவு 144-A-ன்படி படைக்கலன் உரிமம் பெற்ற உரிமதாரர்கள் படைக்கலனை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே படைக்கலன் உரிமதாரர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் உடனடியாக படைக்கலன்களை ஒப்படைக்க வேண்டும். படைக்கலன்களை ஒப்படைக்காமல் பதுக்கி வைத்திருந்தால் அந்த நபர்கள் மீது படைக்கலச் சட்ட விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். காவல் நிலையங்களில் ஒப்படைக்கும் படைக்கலன்கள் தேர்தல் ஆணையத்தின் மறு அறிவிப்பிற்கு பின் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படும். எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாதவாறு படைக்கலன் உரிமம் பெற்ற உரிமதாரர்கள் துப்பாக்கிகளை உடனடியாக அருகில் உள்ள காவல் நிலைய பொறுப்பு அலுவலர்களிடம் ஒப்படைத்து, ஒப்படைத்த விவரத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.