தேங்கிய மழைநீரில் மூழ்கி மீனவர் சாவு
தூத்துக்குடியில் வீட்டின் அருகே தேங்கி கிடந்த மழைநீரில் மூழ்கி மீனவர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடியில் கடந்த மாதம் 17, 18-ந் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் மக்களும் மிகுந்த அவதிக்கு ஆளானார்கள். தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம், அமைச்சர்கள், அதிகாரிகள் ஒருங்கிணைந்து மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிந்து உள்ளது. ஆனால் தாழ்வான பகுதிகளில் தொடர்ந்து தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதனை வெளியேற்றும் பணிகளும் நடந்து வருகின்றன. இந்த நிலையில் தேங்கிய மழைநீரில் தவறி விழுந்து மீனவர் ஒருவர் இறந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தூத்துக்குடி டி.சவேரியார்புரத்தை சேர்ந்தவர் அந்தோணி நிக்கோலஸ். இவருடைய மகன் அருள்ராஜ் (45). மீனவரான இவரது வீட்டை ஒட்டி தாழ்வான குளம் போன்ற பகுதி உள்ளது. இங்கு மழைநீர் தேங்கி நிற்கிறது. அவரது வீட்டின் முன்பும் தண்ணீர் தேங்கி உள்ளது. சுமார் 10 அடிக்கு அந்த பகுதியில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. நேற்று முன்தினம் மாலையில் அருள்ராஜ், தனது வீட்டை ஒட்டி நடந்து சென்றாா். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக தவறி தேங்கி கிடந்த தண்ணீரில் விழுந்தார். இதில் ஆழமான பகுதிக்கு சென்ற அவர் தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறியபடி தத்தளித்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று தண்ணீரில் இறங்கி அருள்ராஜை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அருள்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டின் அருகே தேங்கி கிடந்த மழைநீரில் மூழ்கி மீனவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.