மீன்வலை பாதுகாப்பு கூடம் அமைக்க மீனவர்கள் எதிர்பார்ப்பு

மீன்வலை பாதுகாப்பு கூடம் அமைக்க கடப்பாக்கம் மீனவர்களிடம் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Update: 2024-02-05 09:13 GMT
 மீன்வலை பாதுகாப்பு கூடம் அமைக்க கடப்பாக்கம் மீனவர்களிடம் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம் பகுதியில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடலில் விசைப்படகு மூலம் மீன்பிடித்து விற்பனை செய்வதே இங்குள்ள மக்களின் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில் மீன்வலை பாதுகாப்பு கூடம் இல்லாததால், மீனவர்கள் தங்களது மீன்பிடி வலை மற்றும் உபகரணங்களை கடலோரத்தில் வைத்து வருகின்றனர். இதனால், வெயிலிலும், மழையிலும் நனைந்து மீன் வலைகள் விரைவில் சேதமடைவதால், மீனவ மக்களுக்கு அதிகளவில் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, இந்த பகுதியில் மீன்வலை பாதுகாப்பு கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இடைக்கழிநாடு பேரூராட்சி 13வது வார்டு கவுன்சிலர் தெய்வானை கூறியதாவது: கடப்பாக்கம் பகுதியில் மீன்வலை பாதுகாப்பு கூடம் இல்லாததால், மீனவர்கள் வலைகளை திறந்த வெளியில் வைத்து வருகின்றனர். இதனால், மீன்வலை மக்கி அடிக்கடி சேதமடைகிறது. கடந்த சில நாட்களில் மட்டும் கடலோரத்தில் வைக்கப்பட்டு இருந்த, 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன் வலைகளை மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்தினர். எனவே, மீனவர்களின் நலன் கருதி, அதிகாரிகள் மீன்வலை பாதுகாப்பு கூடம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News