கொடி நாள் தின விழிப்புணர்வு பேரணி
வேலூரில் கொடிநாள் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் துவக்கி வைத்தார்.
கொடி நாள் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன்,கொடிநாள் நிதி வழங்கி, கொடி நாள் நிதி விழிப்புணர்வு பேரணியை வேலூரில் தொடங்கி வைத்தார்.
நம் நாட்டுக்காக போராடிய நமது இராணுவ வீரர்களை கௌரவிக்கும் விதமாகவும் நாட்டின் பெருமையை பாதுகாக்கவும் நாட்டின் எல்லைகளில் தொடர்ந்து போராடும் வீரர்களை கௌரவிக்கும் விதமாகவும் டிசம்பர் 7 ஆம் நாள் படை வீரர் கொடி நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. எனவே இம்மகத்தான வீரர்களுக்கும், அவர்களை சார்ந்தவர்களுக்கும் ஆதரவும், புனர்வாழ்வும் வழங்குவதற்காக ஒவ்வொரு குடிமகனும் தங்களின் தன்னார்வ பங்களிப்பினை கொடிநாள் நிதியாக வழங்கவேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதெ மில்லத் கூட்டரங்கில் நடைபெற்ற படைவீரர் கொடி நாள் தேநீர் விருந்து நிகழ்ச்சியில் போர் மற்றும் போரையொத்த நடவடிக்கைகளில் உயிரிழந்தோரைச் சார்ந்தோர் மற்றும் ஊனமுற்ற முன்னாள் படைவீரர்கள் 10 நபர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி சால்வை அணிவித்து கௌரவித்தார் . தொடர்ந்து கடந்த ஆண்டு படைவீரர் கொடிநாள் நிதி வசூலில் ரூபாய் 10 இலட்சம் வசூலித்த மாவட்ட பதிவாளர், பதிவுத்துறை அலுவலகத்திற்கு பாராட்டி கேடயம் மற்றும் சான்றிதழை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார். பின்னர் முன்னாள் படைவீரர்கள் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.