நேற்று குப்பை வண்டியில் சாப்பாடு, இன்று கெட்டுப்போன உப்புமா

பிரதமர் மோடி வருகையையொட்டி தூய்மை பணி மேற்கொண்ட தூய்மை பணியாளர்களுக்கு குப்பை வாகனத்தில் உணவு வழங்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு கெட்டு போன உப்புமா வழங்கப்பட்டதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

Update: 2024-01-21 05:01 GMT

உணவு உண்ணும் போலீசார் 

பிரதமர் மோடி  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குசாமி தரிசனம் செய்ய நேற்று  காலை வந்தார். அதையொட்டி ஸ்ரீரங்கம் நகர் முழுமையும் தூய்மைப் பணியாளர்கள் களமிறக்கப்பட்டு ஸ்ரீரங்கத்தை தூய்மை செய்தனர். அப்பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்களுக்கு நேற்று குப்பை அள்ளும் வாகனத்தில் உணவை கொண்டுவந்து வழங்கியது பணியாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

பிரதமர் வருகையையொட்டி திருச்சி மற்றும் ஶ்ரீரங்கத்தில் சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களுக்கு நேற்று  காலை வழங்கப்பட்ட உணவு சரியில்லை என போலீ சார் தங்கள் மனக்குமுறலை கொட்டினர். காலை அவர்களுக்கு உணவாக உப்புமா வழங்கப்பட்டது. அது கெட்டுப் போய் நாற்றம் எடுத்து இருந்ததால் காவலர்களால் அதை உண்ண முடியவில்லை. பெரும்பாலான காவலர்கள் அதை குப்பையில் கொட்டிவிட்டு பட்டினி கிடந்தனர். ஏற்கெனவே கடந்த 2-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திருச்சிக்கு வந்த போதும் இதேபோல கெட்டுப்போன உணவைத்தான் வழங்கியதாக போலீஸார் குற்றம் சாட்டுகின்றனர்.

முக்கிய பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு இரவு பகல் பாராமல், வெயில் மழை பாராமல் பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலர்களுக்கு தரமான உணவை வழங்க வேண்டியது போலீஸ் உயர் அதிகாரிகளின் கடமை. இதற்காக அரசும் நிதி ஒதுக்குகிறது. இந்த நிலையில் ஏன் கெட்டுப்போன உணவு அவர்களுக்கு வழங்கப்படுகிறது.இதை செய்தது யார் என விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசார் குமுறுகிறார்கள்.

Tags:    

Similar News