அழகருக்கு ஆட்டுத்தோலில் மஞ்சள் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் தோப்பறை
அழகருக்கு ஆட்டுத்தோலில் மஞ்சள் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் தோப்பறை குறித்த பல நூற்றாண்டு பாரம்பரியத்தின் வரலாறு தெரிந்து கொள்ளலாம்.;
ஆட்டுத்தோல் உறை
அழகருக்கு ஆட்டுத்தோலில் மஞ்சள் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் தோப்பறை - பல நூற்றாண்டு பாரம்பரியத்தின் வரலாறு மதுரை சித்திரைத் திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வின் போது தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் ஆட்டுத்தோலால் ஆன தோப்பறை விற்பனை மும்முரம்.
அதன் நூற்றாண்டு கால பாரம்பரியம் குறித்த சிறப்பு தொகுப்பு. மதுரையில் பண்பாடு கலாச்சார ஆன்மீக அடையாளமாக திகழும் சித்திரை திருவிழா சுட்டெரிக்கும் கடும் வெயிலிலும் களைகட்ட துவங்கியிருக்கிறது. சித்திரை மாதம் வந்து விட்டால் போதும் மதுரைக்காரர்கள் முகத்தில் திருவிழா களை பொங்கி பெருகும். ஒருபுறம் மீனாட்சி கோயில் திருவிழாக்கள் என்றால் மற்றொருபுறம் அழகர் மலையில் இருந்து புறப்பட்டு வரும் கள்ளழகரின் வைகை ஆற்று எழுந்தருளல்,
என மதுரையின் ஒவ்வொரு வீடும் விழாக்கோலம் பூண்டு காணப்படும். இதற்கிடையே மதுரை மாநகரின் மையப் பகுதியான மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி அழகர் திருவிழாவிற்கு தேவையான சல்லடம், கள்ளழகர் வேடம் பூணும் நபர்களுக்கான அலங்கார பொருட்கள் விற்பனை என நாள்தோறும் பொதுமக்களால் நிரம்பி வழியும்.
அதன் ஒரு பகுதியாகத்தான் கீழமாசி வீதி நேரடி அருகே தோப்பறை விற்பனையும் சூடு பிடிக்கும். அது என்ன தோப்பறை? அழகர் திருவிழாவில் தண்ணீர் பீய்ச்சி அடிக்க தோளில் ஒரு தோல்பையோடு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் மக்கள் கூட்டத்தோடு சுற்றிக் கொண்டிருப்பார்கள். தண்ணீரோடு கிருமி நாசினியான மஞ்சள் கலந்து பொதுமக்கள் மீது பீய்ச்சி அடித்துக் கொண்டிருப்பார்கள். அது ஒரு சுகமான அனுபவம். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி, ஆட்டுத்தோலால் ஆன இந்த பையை பல தலைமுறைகளாக எங்கள் மக்கள் தான் மதுரைக்கு வந்து விற்பனை செய்து வருகிறார்கள். எங்களின் முன்னோர்கள் செய்த இந்த ஆன்மீக சேவையை நாங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். ஆட்டுத்தோல்களை வாங்கி தண்ணீரில் சுண்ணாம்புக்கல் சேர்த்து ஊற வைக்கிறோம். பிறகு அதில் உள்ள ரோமங்களை எல்லாம் நீக்கிவிட்டு, நான்கு நாள் ஊற வைத்த பிறகு, மீண்டும் தண்ணீரில் அலசி கத்தியை வைத்து சுரண்டி அதன் பிறகு ஆவாரம்பூ செடியை கொண்டு வந்து தண்ணீரில் தோலோடு ஊற வைக்கிறோம். அதன் பிறகு கருவப்பட்டை, கடுக்காய் ஆகியவற்றையும் சேர்த்து தண்ணீரோடு ஊற வைக்க வேண்டும். காய வைத்த பிறகு மீண்டும் தண்ணீரில் நினைக்க வேண்டும். காலால் தேய்த்து அயன் செய்த மாதிரி விறைப்பாக்க வேண்டும். மேற்கண்ட நடைமுறைகளை செய்த பிறகு தான் ஆட்டு தோல் தற்போதைய பயன்பாட்டிற்கு ஏற்றார் போல் உருவாக்க முடியும். பாரம்பரியமாய் இந்த தொழில் எங்களுக்கு தெரிந்திருப்பதால் ஆட்டின் வலது கால் துளையில்தான் தண்ணீர் பீய்ச்சும் அமைப்பை உருவாக்க முடியும். பிறருக்கு இது குறித்து எதுவும் தெரியாது. இடது கால் துளையை தோள்பட்டையில் தொங்குவதற்கான அமைப்பாக மாற்றி விடுவோம். ஆனால் நாடு சுதந்திரம் பெற்ற நாள் முதலாக இந்த தொழிலுக்கு இதுவரை எந்த அரசாங்கமும் தேவையானதை செய்து கொடுக்கவில்லை.
தொட்டி மற்றும் தண்ணீர் வசதி இல்லாமல் திண்டுக்கல்லில் உள்ள பேகம்பூர் சென்று அங்குள்ள தோல் தொழிற்சாலைகளிடம் இதனை செம்மை செய்து கொண்டு வருகிறோம். அதன் பிறகு அங்கிருந்து மதுரைக்கு கொண்டு வரும்போது அதனை தைத்துக் கொடுப்பதற்கான கூலி என செலவுகள் மிக அதிகம். தோலின் அளவு தன்மையைப் பொறுத்து அதன் விலை ரூபாய் 300 இல் இருந்து ரூ.500, ரூ.600 வரை ஆகும். சில தோல்கள் சிறியதாக இருக்கும் அவற்றால் எங்களுக்கு எந்தவித லாபமும் இருக்காது. ஆனால் அதற்காக வீணாக்காமல் வருகின்ற விலைக்கு விற்பனை செய்து விடுவோம். காரணம் இந்த தொழிலை நாங்கள் வருமானம் கருதி செய்யவில்லை. அழகு மலையானுக்கு நாங்கள் ஆற்றுகின்ற ஆன்மீக கடமையாகவே,
இதுவரை கருதி வருகிறோம். திருவிழாவுக்கு தேவையான மாலையோ சந்தனமோ மற்ற சில பொருட்களோ வேறு எங்கும் வாங்கிவிட முடியும் ஆனால் இந்த தோப்பறை மதுரையில் மட்டும் தான் கிடைக்கும்' என்கிறார். இந்த ஒரு நாள் திருவிழாவுக்காக ஆறு மாதங்களுக்கு முன்பு இருந்தே தயாராகி விடுகிறார்கள். திருவிழா முடிந்ததும் இதற்கான தொழில் தொடர்ந்து இல்லை என்பதால் கூலி வேலைக்கு செல்கிறார்கள். காரியாபட்டியில் உள்ள காலனி பகுதியில் வசிக்கும் 300 குடும்பங்களுக்கு இந்த ஆட்டு தோல் தான்,
வருமான ஆதாரம். இதனைத் தொடர்ந்து தங்க முருகன் கூறுகையில், இந்த தொழில் காரணமாக எங்களுக்கு மட்டுமின்றி மதுரைக்கும் பெருமைதான். பல தலைமுறைகளாக நாங்கள் இந்த தொழிலை மேற்கொண்டு வருகிறோம். சித்திரை திருவிழா கடுமையான வெப்ப காலத்தில் நடைபெறுகின்ற காரணத்தால் மக்களை குளிர்விப்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடு தான் தண்ணீர் பீய்ச்சி அடித்தல் எனும் சடங்கு. தமிழக அரசு எங்கள் கிராமத்தில் தண்ணீர் வசதியோடு தொட்டிகள் அமைத்துக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்கிறார் ஒரு வாரத்திற்கு முன்பே தங்களது குழந்தைகள் குடும்பங்களோடு மதுரை கீழமாசி வீதி தேரடி பகுதியில் கூடி விடுகிறார்கள்.
மதுரை மாவட்டம் மட்டுமன்றி சுற்றியுள்ள பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து இந்த தோப்பறையை வாங்கி செல்கிறார்கள். அதே கிராமத்தைச் சேர்ந்த சொர்ண லட்சுமி கூறுகையில், எங்களுக்கு போதுமான தண்ணீர் வசதி இல்லாத காரணத்தால் திண்டுக்கல் சென்று ஆட்டு தோல்களை வாங்கி கொடுத்தால் ரோமங்களை மட்டும் நீக்கி தருவார்கள். மற்ற வேலைகள் அனைத்தையும் நாங்கள் காரியாபட்டியில் தான் மேற்கொள்ள வேண்டும். இதற்காக கூலி ஆட்களுக்கு பணம் கொடுத்து இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
எங்களுக்கு பெரிதாக இதில் இருந்த வருமானமும் இல்லை என்ற போதும் பாரம்பரியமாக செய்து வருகின்ற காரணத்தால் பக்தர்களின் மனம் கோணாமல் விற்பனை செய்கிறோம். அலங்காநல்லூரைச் சேர்ந்த கள்ளழகரின் பக்தர் பாலகிருஷ்ணன் கூறுகையில், என் குடும்பத்தில் ஐந்தாவது தலைமுறையாக தண்ணீர் பீச்சும் நேர்த்திக்கடனை செய்து வருகிறோம். கள்ளழகரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மஞ்சள் நீரால் நாங்கள் தண்ணீர் பீய்ச்சுகிறோம். இவை எதுவும் விளையாட்டுக்காக அல்ல. மக்களுக்கு நோய் நொடிகள் வராமல் இருப்பதற்காக இந்த மஞ்சள் நீரை நாங்கள் புனித நீராக பீய்ச்சி வருகிறோம்.
சாதி சமூக நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் கள்ளழகர் திருவிழா மதுரையில் ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருகிறது என்கிறார்.