சேலத்தில் 5வது நாளாக100 டிகிரியை தாண்டி சுட்டெரிக்குது வெயில்

சேலத்தில் 5வது நாளாக100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரிக்கும் நிலையில், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

Update: 2024-03-09 05:20 GMT

சேலத்தில் 5வது நாளாக100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரிக்கும் நிலையில், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.  

சேலத்தில் 5-வது நாளாக தொடர்ந்து 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரிப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கோடை காலம் எனப்படும் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதில் அக்னி நட்சத்திரம் காலக்கட்டத்தில் வெயில் உக்கிரம் உச்சத்தை தொடும். அப்போது தான் வெயிலின் கொடுமை அதிகமாக இருக்கும். ஆனால் சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. குறிப்பாக தொடர்ந்து 5 நாட்களாக 100 டிகிரியை தாண்டி வெயிலின் அளவு பதிவாகி சுட்டெரித்து வருகிறது. அதாவது கடந்த 4-ந் தேதி 100 டிகிரியும், 5-ந் தேதி 102.6 டிகிரியும், 6-ந் தேதி 100.1 டிகிரியும், நேற்று முன்தினம் 102.2 டிகிரியும், நேற்று 100.8 டிகிரியும் பதிவாகி உள்ளது. வெயிலின் தாக்கத்தால் சாலையில் நடந்து செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. வெயிலின் கொடுமையால் வயதானவர்கள், நோயாளிகள் உள்பட பலர் வீட்டிலேயே முடங்கி போய் உள்ளனர். வெயில் குறைந்த பிறகு மாலை வேளையில் தான் அவர்கள் வெளியே செல்கின்றனர்.

மதிய வேளையில் அனல்காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து செல்கின்றனர். வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டதால் முக்கிய இடங்கள் மற்றும் சாலையோரங்களில் தற்காலிகமாக ஏராளமான பழ ஜூஸ் கடைகள் தொடங்கி விட்டன. இதனால் வெயிலில் இருந்து தப்பித்து கொள்ள பொதுமக்கள் அதை வாங்கி பருகி தாகத்தை சற்று தணித்து வருகின்றனர். வெயிலினால் பகல் மற்றும் இரவு நேரங்களில் வீடுகளில் புழுக்கம் அதிகமாக உள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெப்பத்தை தாக்குப்பிடிக்க முடியாமல அவதிப்படுகின்றனர்.

Tags:    

Similar News