ஏற்காடு மலைப்பகுதியில் காட்டுத்தீ
குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா அருகே உள்ள காட்டுப்பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட காட்டு தீயை தீயணைப்பு துறையினர் சுமார் 4 மணி நேரம் போராடி அணைத்தனர்.
சேலம் மாவட்டத்தில் கோடைகாலம் தொடங்கியதால் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அதை தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஏற்காடு வனப்பகுதியில் அடர்ந்த காடுகள் அதிகளவில் உள்ளதால் அடிக்கடி காட்டுத்தீ ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், ஏற்காடு அடிவாரம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா பகுதியில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்தது. சிறியது முதல் பெரிய மரங்களில் காட்டுத்தீ பரவியதால் ஏற்காடு மலைப்பாதையில் சென்ற வாகன ஓட்டிகள் அதை பார்த்து சூரமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்து கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அடர்ந்த வனப்பகுதி என்பதாலும், தீ மளமளவென பரவியதால் உடனடியாக தீயை அணைக்க முடியவில்லை. இதையடுத்து சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்து கட்டுப்படுத்தப்பட்டது.