துர்நாற்றத்துடன் வெளியேறிய கழிவுநீர் - பயணியர் அவதி
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றத்துடன் கழிவுநீர் வெளியேறியதால் பயணிகள் அவதி அடைந்தனர்.;
Update: 2024-02-13 02:32 GMT
கழிவு நீர்
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பேருந்து நிலைய வளாகத்தில், தடம் எண்: 76பி, 76சி உள்ளிட்ட பூந்தமல்லி, கோயம்பேடு செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்தின் அருகில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, துர்நாற்றத்துடன் கழிவுநீர் சாலையில் வழிந்தோடி வருகிறது. இதனால், பயணியர், நடைபாதை வியாபாரிகள், அப்பகுதியில் கடை வைத்துள்ளவர்கள், போக்குவரத்து ஊழியர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இப்பகுதியில் அடிக்கடி பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.