ரேஷன் அரிசி கடத்திய நால்வர் கைது
சேலத்தில் ரேஷன் அரிசி கடத்திய நால்வரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம், பழைய சூரமங்கலம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் போலீசார் அங்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 2 சரக்கு வாகனங்களில் கொண்டு வரப்பட்ட ரேஷன் அரிசியை வேறு ஒரு சரக்கு வாகனத்தில் சிலர் ஏற்றி கொண்டிருந்தனர்.
போலீசாரை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் பழைய சூரமங்கலம் பகுதியை சேர்ந்த சூர்யா (வயது 29), பெரியபுத்தூர் பகுதியை சேர்ந்த மாணிக்கம் (37), பரமசிவம் (43), ரவி (48) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி வடமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும், ஆடு, மாடுகளுக்கு தீவமானமாகவும் அதிக விலைக்கு விற்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 2¾ டன் ரேஷன் அரிசி மற்றும் 3 சரக்கு வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.