நான்கு மின்சார ரயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தம்
மறைமலைநகரில் ஒரே தண்டவாளத்தில் நான்கு மின்சார ரயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தப்பட்டதை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
செங்கல்பட்டு அடுத்த மறைமலைநகா் - சிங்கபெருமாள்கோவில் இடையே ஒரே தண்டவாளத்தில் அடுத்தடுத்த நான்கு மின்சார ரயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தப்பட்டதால் ரயிலில் இருந்த பயணிகள் அதிா்ச்சியடைந்தனா். தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் லேசான சாரல் மழை பெய்தது. அப்போது சிங்கப்பெருமாள்கோவில் - மறைமலை நகா் இடையே திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மின்சார ரயில்கள் அங்காங்கே நிறுத்தப்பட்டன. மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு சிக்னல் கோளாறு சரி செய்த பிறகே மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
செங்கல்பட்டு - தாம்பரம் இடையே மூன்று ரயில் பாதைகள் இருப்பதால் சிக்னல் கோளாறு காரணமாக விரைவு ரயில் தாமதமாக செல்லக்கூடாது என்பதற்காகவே மின்சார ரயில்கள் தாம்பரம் - செங்கல்பட்டு மாா்க்கமாக ஒரே தண்டவாளத்தில் அடுத்தடுத்த நான்கு ரயில்கள் 20 மீட்டா் இடைவெளியில் நிறுத்தப்பட்டிருந்ததாக கூறினா். ரயில் ஓட்டுநா்களின் எச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக அதிா்ஷ்டவசமாக விபத்து தவிா்க்கப்பட்டது. வாரத்தில் முதல் நாளான திங்கள்கிழமை சிக்னல் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக பணிக்குச் செல்வோா் தாமதமாகச் செல்ல வேண்டிய நிலை உருவானது.