ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் விஷம் அருந்தி தற்கொலை!
கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By : King 24x7 Angel
Update: 2024-03-20 11:09 GMT
கோவை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (54) மனைவி விசித்ரா (46) மகள்கள் ஸ்ரீநிதி (25) ஜெயநிதி (14) ஆகியோருடன் வசித்து வருகிறார்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செல்வபுரத்தில் மணி ரைஸ்மில் என்ற பெயரில் அரிசி ஆலை ஒன்றை நடத்தி வந்த நிலையில் சுமார் 18 கோடி ரூபாய் அளவிற்கு கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடனில் இருந்து மீண்டு வந்த ராமச்சந்திரன் தற்போது மது பாட்டில்களுக்கு பயன்படுத்தப்படும் மூடிகளை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை ரைஸ் மில் இருந்த வளாகத்திலேயே நடத்தி வரும் இடத்திலேயே வீடும் அமைந்துள்ளது.மேலும் வீட்டின் அருகில் உள்ள காலியிடத்தில் வீடு ஒன்றை ராமச்சந்திரன் கட்டி வந்ததாக கூறப்படுகிறது.இவரது மூத்த மகள் ஸ்ரீநிதி கனடாவில் பட்டப்படிப்பு பயின்று வந்த நிலையில் கடந்து சில நாட்களுக்கு முன் இந்தியா திருப்பியவர் தனது பெற்றோர்களுடன் தங்கி இருந்துள்ளார்.நேற்று இரவு வழக்கம் போல் நால்வரும் தூங்கச் சென்றபோது வீட்டில் பணிபுரியும் பெண் பணியாளரை நாளை வேலைக்கு வர வேண்டாம் என ராமச்சந்திரன் கூறியதாக சொல்லப்படுகிறது. இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாத நிலையில் ராமச்சந்திரனின் சகோதரி வழக்கம்போல் அவர்களை பார்ப்பதற்காக வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.அப்போது வீட்டில் உள்ள அறை ஒன்றில் 4 பேரும் மயக்கமாகிக் கிடப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தவர் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் பரிசோதித்த பார்த்தபோது நால்வரும் உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களது உடல்களை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நால்வரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில்கடன் தொல்லை காரணமாக அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடனிலிருந்து மீண்டு வந்த ராமச்சந்திரன் எதனால் இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்பது தெரியாததால் அவரது உறவினர்கள் மற்றும் அருகாமை வீடுகளில் வசிப்பவர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.