ஏலச்சீட்டு நடத்தி மோசடி - எஸ்.பி அலுவலகத்தில் புகார்

சிவகங்கை அருகே ஏலச்சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்டவர் மீது எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்

Update: 2024-05-10 04:08 GMT

மனு அளிக்க வந்தவர்கள் 

சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

நாட்டரசன்கோட்டையில் சலூன் கடை நடத்தி வந்தவர் தாளைராஜன்(50). இவர் ஏலச்சீட்டு நடத்துவதாகக்கூறி அப்பகுதி மக்கள் சுமார் ஆயிரம் பேரிடம் சுமார் ரூ. 2 கோடி வரை வசூல் செய்ததாகக்கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த வாரம் கடை மற்றும் குடியிருந்த வீட்டையும் இரவோடு இரவாக காலி செய்து குடும்பத்துடன் தலை மறைவு ஆகிவிட்டதாக கூறப்படுகிறது இது குறித்து தகவலறிந்த அப்பகுதி பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பல இடங்களில் அவரை தேடியும் எந்தத்தகவலும் கிடைக்க வில்லை. இதையடுத்து, பணத்தை பறிகொடுத்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு வந்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் மனு அளித்து, மோசடி செய்துவிட்டு தலைமறைவாகியுள்ள தாளைராஜனை கைது செய்து, இழந்த பணத்தை மீட்டுத்தர துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் கூறியுள்ளனர். ஏலச்சீட்டு நடத்தி நடுத்தர, எளிய மக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த சம்பவம் மாவட்ட மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News