திருமணம் செய்வதாக கூறி ரூ.3.5 கோடி மோசடி - பெண் மீது புகார்
திருமணம் செய்துகொள்வதாக கூறி ரூ.3.5 கோடி வாங்கி கொண்டு மோசடி செய்ததாக அவரது ஆண் நண்பர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அந்த பெண்ணை தேடி வந்த நிலையில், அவர் போச்சம்பள்ளியில் பதுங்கி இருப்பதை அறிந்து அங்கு சென்று விசாரணைக்கு அழைத்த போது வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு 5 மணி நேரத்திற்கு மேலாக கதவை திறக்காமல் விசாரணைக்கு வந்த போலீசாரை திருப்பி அனுப்பிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
தர்மபுரி மாவட்டம், தருமபுரி டவுன் அருள் இல்லத்தில் வசித்து வரும் ராமன் என்பவரது மகன் ஜான். இவருக்கு திருமணம் ஆகி ஷிபா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர் AC மெக்கானிக்காக வேலை செய்து வந்த இவர் இவருக்கு சொந்தமான வீட்டை தனியார் வங்கிக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அந்த வங்கிக்கு பெண் ஒருவர் அடிக்கடி வந்து சென்ற நிலையில் அந்த பெண் குறித்து ஜான் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டிய நிலையில் அந்த பெண்ணுடன் கொஞ்சம் கொஞ்சமாக பேசத் தொடங்கியுள்ளார்.
அப்பொழுது அந்த பெண் தர்மபுரி மாவட்டம் திப்பம்பட்டி அடுத்த பன்னிகுளத்தைச் சேர்ந்த புனிதா என்பதும் அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளது தெரிய வந்தது. இதில் புனிதாவின் கணவர் ஓட்டுனராக பணி செய்து வரும் நிலையில் அவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்ட நிலையில் கணவன் இல்லாமல் தனிமையில் இருந்த புனிதாவை ஜான் நட்பாக பேச துவங்கியுள்ளார். பின்னர் இவர்களது பேச்சுவார்த்தை திருமணம் வரை செல்ல தீர்மானித்துள்ளனர்.
இதில் ஜானிற்கும் அவரது மனைவிக்கும் இடையில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில் அவரை விவாகரத்து செய்துவிட்டு புனிதாவை திருமணம் செய்து குடும்பம் நடத்த திட்டமிட்டு புனிதாவிடம் கூறியுள்ளார். பின்னர் இருவரும் ஒன்று சேர்ந்து கோவையில் உள்ள தனியார் அப்பார்ட்மெண்டில் இரண்டு வீடுகள் வாடகைக்கு எடுத்து புனிதாவின் 2 மகன்கள் இருக்க ஒரு வீடும் புனிதா மற்றும் ஜான் இருக்க ஒரு வீடும் என வாடகைக்கு எடுத்து அங்கேயே தங்கி உள்ளனர். இதில் ஜானிற்கு அவரது தந்தை அவருக்கு கொடுக்க வேண்டிய வீட்டின் பாகத்தை பிரித்து கொடுத்துள்ளார்.
பின்னர் அந்த பணத்தை கொண்டு சென்ற ஜான் கோவையில் ஒரு வீடு மற்றும் தர்மபுரி அருகே ஒரு ஏக்கர் பரப்பில் ஒரு விவசாய நிலமும் வாங்கி உள்ளார் வாங்கப்பட்ட நிலங்கள் மற்றும் சொத்துக்களை புனிதாவின் பெயரில் கிரயம் செய்து வைக்கப்பட்ட நிலையில் மேலும் கோவையில் உள்ள பெரிய நகை கடைகளில் 70 சவரன் தங்க நகைகள் வாங்கியதாகவும் மேலும் புனிதாவின் உறவினர்களுக்கு அடிக்கடி பணம் கொடுத்து அனுப்பியதாகவும் மேலும் புனிதாவின் இரண்டு மகன்களின் படிப்பிற்கான பணம் ஆகியவை ஜான் கொடுத்த நிலையில் அவரை திருமணம் செய்ய அழைத்துள்ளார். அப்பொழுது புனிதா ஜானிடம் தகராறு செய்து விரட்டியதாக தெரிகிறது. பின்னர் அதிர்ச்சி அடைந்த ஜான் தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் தகுந்த ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மாவட்ட குற்றப்பிரிவு அலுவலர்கள் தலைமறைவாக இருந்த புனிதா மற்றும் அவரது மகன்கள் மூன்று பேரையும் சுமார் 6 மாதங்களுக்கும் மேலாக தேடி வந்தனர்.
இதில் புனிதா மற்றும் அவரது மகன்கள் போச்சம்பள்ளியில் உள்ள தனியார் அப்பார்ட்மெண்டில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி தலைமறைவாக இருந்தது தெரிய வந்தது. பின்னர் புனிதாவின் அண்ணன் மற்றும் அவரது தந்தை ஆகியோரது செல்போன் எண்ணிற்கு வரும் போன் அழைப்புகளை ஆய்வு செய்து கண்காணித்து வந்த நிலையில் புனிதா அவர்களுடன் அடிக்கடி பேசி வந்ததை அறிந்து செல்போன் ஆதாரத்தின் மூலம் புனிதா போச்சம்பள்ளியில் தங்கி இருப்பது கண்டுபிடித்தனர். பின்னர் அங்கு வந்த தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறை கண்காணிப்பாளர் தேவராஜன் தலைமையிலான போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்தனர்.
அப்பொழுது புனிதா வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளே வந்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் எனது வழக்கறிஞர் மூலம் நான் வருகிறேன் என்று சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் போலீசாரின் சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். சுமார் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணத்தை ஏமாற்றியதாக வழக்கு பதிவு செய்த நிலையில் அந்த பெண் போச்சம்பள்ளியில் தங்கி இருந்து போலீசாருக்கு ஆட்டம் காட்டி திருப்பி அனுப்பிய சம்பவம் போச்சம்பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.