வெள்ளியை தவற விட்டவரிடம் ஒப்படைத்த உணவக உரிமையாளர்
வெள்ளியை தவற விட்டவரிடம் உணவக உரிமையாளர் ஒப்படைத்தார்.
தஞ்சையில் சாப்பிடச் சென்ற போது தவற விட்டு விட்டு சென்ற 4 லட்சம் ரூபாய் மற்றும் அரை கிலோ வெள்ளி கட்டிகளை உரியவரிடம் ஒப்படைத்த, உணவக உரிமையாளரை காவல்துறையினர் பாராட்டினர். தஞ்சாவூர், மருத்துவக்கல்லுாரி சாலையில் உள்ள ஈஸ்வரி நகரை சேர்ந்தவர் காசிநாதன். இவர் அப்பகுதியில் மாஸ்டர் மெஸ் என்ற உணவகத்தை நடத்தி வருகிறார். இ
வருடைய கடைக்கு சனிக்கிழமையன்று சாப்பிட வந்த ஒருவர், தனது பையை உணவகத்தில் மறந்து வைத்து விட்டு சென்றார். சில மணி நேரம் கழித்து இதைப் பார்த்த காசிநாதன், பையை திறந்து பார்த்த போது, அதில் பணம் மற்றும் வெள்ளிக் கட்டிகள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து காசிநாதன், அந்த பணம் மற்றும் வெள்ளி இருந்த பையை, மருத்துவக்கல்லூரி காவல்துறை ஆய்வாளர் நசீரிடம் ஒப்படைத்தார். மே
லும், பணம் இருந்த பையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த கோட்டூரில் உள்ள ஜி.ஆர்.எம். நகை்கடை என எழுதி இருந்தது. மேலும், அந்த பையில் இருந்த போன் நம்பரில், காசிநாதன் தகவல் அளித்தார். அதன்படி பணத்தை தவற விட்டு சென்றது, ஜி.ஆர்.எம். நகைக்கடை நடத்தி வரும் கணேஷ் என்பது தெரியவந்தது. திருச்சிக்கு சென்று விட்டு, மீண்டும் ஊருக்கு செல்லும் போது, உணவகத்தில் சாப்பிடச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக இரவு கணேஷ், தஞ்சை மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்துக்கு வந்தார்.
ஆய்வாளர் நசீர், உதவி ஆய்வாளர் சசிரேகா ஆகியோர் முன்னிலையில், உணவக உரிமையாளர் காசிநாதன், 4 லட்சம் ரூபாய் மற்றும் அரை கிலோ வெள்ளிக் கட்டிகளை, உரிமையாளர் கணேஷிடம் ஒப்படைத்தார். அப்போது, மனித நேயத்துடன், நேர்மையுடனும் செயல்பட்ட உணவக உரிமையாளர் காசிநாதனை காவல்துறையினர் பாராட்டி பொன்னாடை அணிவித்தனர். மேலும், பணம் மற்றும் வெள்ளிப் பொருட்களை பெற்றுக் கொண்ட கணேஷ், மருத்துவக்கல்லுாரி காவல்துறையினருக்கும், காசிநாதனுக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.