குடியிருப்பு பகுதியில் குப்பை - நகராட்சி வாகனம் சிறைப்பிடிப்பு
சீர்காழியில் நகராட்சி குப்பையை குடியிருப்பு பகுதியில் கொட்டுவதை கண்டித்து டிராக்டரை சிறைப்பிடித்து போராட்டம் - போலீசார் சமரசம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி, குப்பைகளை அகற்றுவதற்கு தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் விட்டுள்ளது. நகராட்சி குப்பை கிடங்கில் போதிய இட வசதி இல்லாததால், நகராட்சிக்கு சொந்தமான பிச்சைக்காரன் விடுதி தெருவில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள், விளை நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக தெரிவித்து குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில், பிச்சைக்காரன் விடுதியில் குப்பைகள் கொட்ட கூடாது என, நகராட்சி ஆணையர் முன்னிலையில் முடிவு செய்யப்பட்டது.
மீண்டும் குப்பைகளை கொட்டுவதற்கு ஒப்பந்ததாரர் ஏற்றி வந்த குப்பை டிராக்டரை, வழிமறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி வணிகர் அணி மாநில துணை செயலாளர் விஜயரங்கன் தலைமையில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சீர்காழி காவல் ஆய்வாளர் சிவக்குமார் நேரில் வந்து போராட்டக்காரரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் குப்பை கொட்ட வந்த டிராக்டரை திருப்பி அனுப்பிவைத்தனர். வரும் காலங்களில் பிச்சைக்காரன் விடுதியில் குப்பைகளை கொட்ட கூடாது. ஏற்கனவே கொட்டப்பட்ட குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் பேரில் போராட்டக்காரர்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டனர். இதனால் சீர்காழி- புளிச்சக்காடு சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.