கள்ளக்குறிச்சி நகராட்சி மின் மயானத்தில் மலைபோல் குப்பைக் குவியல்
கள்ளக்குறிச்சி நகராட்சி மின் மயானத்தில் மலைபோல் குப்பை குவிந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மின் மயானத்தில் மலைபோல் குவிந்துள்ள குப்பைகளால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில், சேகரிக்கப்படும் குப்பைகள் தியாகதுருகம் சாலையில் கோமுகி ஆற்றின் அருகே கொட்டப்பட்டு வந்தது.
அப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதற்கு பசுமை தீர்ப்பாயம் தடை உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரித்து மறுசுழற்சி செய்து உரம் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதற்காக திடக்கழிவு மேலாண்மை துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மின் மயான வளாகத்தில் பசுமை உரப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்காக நகராட்சியின் 21 வார்டுகளிலும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து துாய்மை பணியாளர்கள் மூலம் நாள்தோறும் சேகரிக்கப்படுகிறது. அதில் மக்கும் குப்பைகள் மூட்டையாக நகராட்சி மின் மயானத்தில் கொட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், நகராட்சி பகுதியில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு மின் மயானத்திற்கு கொண்டு செல்லும் போது, மலைபோல் குவிக்கப்பட்டுள்ள குப்பை மூட்டைகளால் அப்பகுதியில் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.
மேலும், மழை பெய்யும் போது சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. இதனால் மின் மயானத்திற்கு செல்வோர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.