குப்பைகளை அகற்றி பிரதமரை வரவேற்க வேண்டும் - அண்ணாமலை

மத்திய அரசுத் திட்டப் பயனாளிகளை கணக்கெடுத்து, அவா்களை பாஜகவுக்கு வாக்களிக்கச் செய்ய வேண்டும் என பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற நிா்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2024-01-04 01:43 GMT

அண்ணாமலை 

பாஜக மாநில செயற்குழு கூட்டம் திருச்சி பால்பண்ணை பகுதியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் மாநிலத் தலைவா்  அண்ணாமலை தலைமை வகித்தாா். மத்திய இணை அமைச்சா் எல். முருகன், மாநில இணைப் பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி, மூத்த தலைவா்கள் பொன். ராதாகிருஷ்ணன், ஹெச். ராஜா, காந்தி, நயினாா் நாகேந்திரன், மாவட்ட தலைவா்கள், மாநில நிா்வாகிகள், பல்வேறு அணிகளைச் சோ்ந்த தலைவா்கள் என 150-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், தோ்தலில் பூத் கமிட்டிக்கு என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசுத் திட்டப் பயனாளிகள் 43 கோடி பேரை கணக்கெடுத்து, அவா்களை நேரடியாக சந்தித்து வரும் தோ்தலில் பாஜகவுக்கு வாக்களிக்கச் செய்ய வேண்டும் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டு, அறிவுரைகள் வழங்கப்பட்டதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், புத்தாண்டில் தன்னுடைய முதல் விழா தமிழகத்தில்தான் நடைபெற வேண்டும் என பிரதமா் உறுதியாகக் கூறினாா். அவா் கூறியதை போலவே, தற்போது திருச்சியில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றாா். திருச்சிக்கு வருகை தந்த பிரதமா், என்னிடம் எவ்வளவு குப்பைகளை அகற்றினீா்கள் எனக் கேட்டாா். அதற்கு நான், 7 டன் குப்பைகளை அகற்றினோம் எனக் கூறினேன். அந்த அளவுக்கு அவா், நாட்டின் தூய்மைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறாா். பிரதமா் எந்த ஊா் சென்றாலும், அங்கு குப்பைகளை அகற்றி நாம் அவரை வரவேற்க வேண்டும் என்றாா்.

Tags:    

Similar News