ஆழ்வார்திருநகரி கோவிலில் கருடசேவை :திரளான பக்தர்கள் தரிசனம்
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் பங்குனி திருவிழாவில் கருடசேவை நடந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நவதிருப்பதி கோவில்களில் ஒன்பதாவது ஸ்தலமாக ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா சிறப்பாக நடைபெறும். இதன்படி இந்தாண்டிற்கான பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா காலங்களில் தினமும் காலை, மாலையில் பெருமாள் தாயார்களுடன் திருவீதி உலா நடைபெற்றது. 5-ம் திருநாளான நேற்று இரவு 7 மணி அளவில் கருடசேவை நடந்தது. கருடசேவை நிகழ்ச்சியை முன்னிட்டு காலையில் கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடந்தது. தொடர்ந்து திருமஞ்சனம், நித்தியல் கோஷ்டி, தீர்த்தம் சடாரி வழங்கப்பட்டது.
இரவு 7 மணி அளவில் கருட வாகனத்தில் பொலிந்து நின்ற பிரானும், அன்ன வாகனத்தில் நம்மாழ்வாரும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகின்ற 24-ந் தேதி நடைபெறுகிறது. 25-ந் தேதி பங்குனி உத்திரத்தில் தாமிரபரணி நதியில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மற்றும் ஊர்மக்கள் செய்து வருகின்றனர்.