அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற மாணவிகளும் புதுமைப்பெண் திட்டத்தில் சேரலாம்
அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற மாணவிகளும் புதுமைப்பெண் திட்டத்தில் சேரலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார் .
தமிழக அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் புதுமைப்பெண் திட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் உயர்கல்வி முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டு மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.
இத்திட்டத்தால் அரசுப்பள்ளிகளில் படித்த மாணவிகள் ஏற்கனவே பிறகல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவித்தொகை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுவரை அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்தால் பயன்பெற்றனர்.
இந்நிலையில் தற்பொழுது வெளியிடப்பட்ட புதிய அரசானையின்படி வரும் கல்வியாண்டு முதல் புதுமைப்பெண் என்ற இந்த சிறப்பான திட்டத்தின் மூலம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் பயின்ற மாணவிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
எனவே, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவிகள் உயர்கல்வியில் சேரும் போது கல்லூரி நிர்வாகம் அந்த மாணவிகளை இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற வழிவகை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.