காலிபிளவருக்கு நல்ல விலை - விவசாயிகள் மகிழ்ச்சி.
அரூர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகளிடம் இருந்து காலி பிளவர் ஒரு பூ ரூ.20 முதல் ரூ.30 வரை கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில், பாலக்கோடு, பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி, அரூர், கொளகம்பட்டி, மங்கானேரி உள்ளிட்ட பகுதிகளில் 70 நாட்கள் பயிரான காய்கறி பயிர்கள் அதிகளவில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
குறைந்த நாட்களில் அதிக லாபம் என்பதால் விவசாயிகள் காலிபிளவர், முட்டைகோஸ், முள்ளங்கி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்து வருகின்றனர். காலிஃப்ளவர் சாகுபடி தர்மபுரி மாவட்டத்தில் அமோகமாக உள்ளது.குறிப்பாக கடந்தாண்டு காலிபிளவர் அதிகளவில் சாகுபடி செய்ததால் விளைச்சல் அதிகரித்து விலை வீழ்ச்சியடைந்தது.
இதனால் கடந்தாண்டு காலிபிளவர் சாகுபடியில் போதிய விலை இல்லாததால், விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. கடந்தாண்டை விட இந்தாண்டு காலிபிளவர் குறைந்தளவில் விவசாயிகள் சாகுபடி செய்தனர். கடந்த சில மாதங்களாக காலிபிளவர் விற்பனையாகவிலை. இதனால் விவசாயிகள் போதிய விலை கிடைக்காமல் கவலை அடைந்தனர். தற்போது காலிபிளவர் சீசன் தொடங்கியுள்ளதால், தர்மபுரி மாவட்டத்தில், காரிமங்கலம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, அரூர், கொளகம்பட்டி, மங்கானேரி உள்ளிட்ட பகுதியில் காலி பிளவர் அமோக விளைச்சல் அடைந்துள்ளது.
வருகின்ற தை மாதத்தில் திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதால், அதிகமாக காலிபிளவர் பயன்படுத்தப்படுகிறது. இதனால் காலிபிளவர் விலை தற்போது அதிகரித்து, ரூ.20 முதல் ரூ.30-க்கும் விற்பனையாகிறது. மேலும் விவசாயிகளிடம் வாங்கி, வெளி மார்க்கெட்டில், ரூ. 40 முதல் 50 வரை விற்பனையாகிறது. இதனால் காலிபிளவர் பயிர் செய்துள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரு ஏக்கர் பரப்பில் பயிர் செய்ய ரூ. 40ஆயிரம் வரை செலவாகிறது. தற்போது ரூ.1 இலட்சம் வரை லாபம் கிடைத்துள்ளது.
விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் வியாபாரிகள் ரூ.22-க்கு வாங்கி செல்கின்றனர். ஆனால் எங்களிடம் வாங்கி விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு ஒரு மடங்கு இலாபம் எளிமையாக கிடைக்கிறது. இதனால் கூடுதலாக ரூ.5 சேர்த்து கொடுத்தால், நல்ல வருவாய் கிடைக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். பேட்டி: மாணிக்கம், விவசாயி, மங்கானேரி,