அரசு மருத்துவமனை விரிவாக்கம் செய்யும் பணி தீவிரம் !
திண்டிவனத்தில் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பிரிவு கட்டும் பணி தீவிரம்
திண்டிவனம் அரசு மருத்துவமனை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக குறுகிய இடத்தில் போதுமான கட்டட வசதியின்றி செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ம் தேதி, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக உயர்த்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டதன் மூலம் மருத்துவமனைக்கு கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்படுவர். மேலும், கூடுதலாக 400 படுக்கை வசதிகள் கிடைக்கும்.இது மட்டுமின்றி பல்வேறு முக்கிய மருத்துவ சிகிச்சை பிரிவுகள் துவங்கவும், கூடுதலாக மருந்துகள் ஒதுக்கீடு செய்யவும் வாய்ப்பு ஏற்பட்டது.
இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு மார்ச் 1ம் தேதி 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டும் பணி துவங்கியது. அதன்படி, மாவட்ட தலைமை மருத்துவமனையில், மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தைகள் பிரிவு தரைதளம் மற்றும் 4 அடுக்கு மாடியுடனும், மற்றொரு பிளாக்கில் தரைத்தளத்துடன் 5 மாடி கட்டடங்கள் கட்டுவதற்காக பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதில் தரைத்தளத்தில் காத்திருப்பு பகுதி, மருந்தகம், எக்ஸ்ரே, ஸ்கேன், கோப்புகள் அறை, புறநோயாளிகள் வார்டு, மீட்பு அறை, அவசர சிகிச்சை பிரிவு, காவலர் விசாரணை பிரிவு, மருத்துவர் மற்றும் செவிலியர் அறைகள் கட்டப்பட உள்ளது.இந்தப்பணிகள் அனைத்தும் 18 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டது. இருந்தும் தற்போது காலக்கெடுவைக் கடந்து பணிகள் நீண்டு கொண்டே போகிறது.
தற்போது முதற்கட்டமாக மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தைகள் பிரிவு தளத்திற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் ஒரு மாதத்திற்குள் நிறைவு பெற்று விடும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். இந்த பிரிவில் 100 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.தற்போது பெரும்பாலான பணிகள் முடிந்துள்ள நிலையில் பெயிண்ட் அடிக்கும் பணிகள், டைல்ஸ் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்காலிகமாக பிரசவத்திற்காக வரும் பெண்கள் மருத்துவமனையில் உள்ள பழைய கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமின்றி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பெண்களுக்கு அருகில் உள்ள கண் மருத்துவனை பிரிவிற்கு தற்காலிகமாக அனுப்பி வைக்கப்படுகின்றனர்.கர்ப்பிணிகள், குழந்தைகள் சிகிச்சையை கருத்தில் கொண்டு முதற்கட்டமாக மாவட்ட தலைமை மருத்துவமனையில், மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தைகள் பிரிவு ஒரு மாதத்திற்குள் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு, பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.