அரசுப்பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு
நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் அரசுப்பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு மேள தாளத்துடன் கிரீடம் அணிவித்து, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2024–25ம்கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பில் புதிதாக சேர்ந்த 35மாணவர்களுக்கு நேற்று, கிரீடம் அணிவிக்கப்பட்டு மேள, தாளத்துடன் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் [சத்துணவு] மூர்த்தி மலர்செண்டு மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்றார். முன்னதாக, மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளியில் தொடங்கி எலச்சிபாளையம் பஸ்நிறுத்தம் வழியாக, பி.டி.ஓ அலுவலகம் வரையில் மாணவர் தீவிர சேர்க்கை பேரணி நடந்தது.
இதில், அரசுபள்ளியில் மாணவர்களை சேர்ப்பதன் மூலம் மாணவர்களுக்கு அரசு வழங்கிடும் சலுகைகள் குறித்து, துண்டு பிரசுரங்களை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், வட்டார கல்வி அலுவலர்கள் ராஜவேல், வெங்கடாசலம், வட்டாரவளமைய மேற்பார்வையாளர் மகாலிங்கம், தலைமை ஆசிரியை தங்கமணி, உதவிஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.