அரசு வழங்கும் விதைகடலை மோசம் - விவசாயிகள் புகார்
வேளாண்மைத்துறை மூலம் வழங்கப்படும் கடலை விதைகள் மிகவும் மோசமாக குப்பையில் வீசும் நிலையில் உள்ளது. ஆனால் தனியாரிடம் தரமான விதைகளாக உள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர்.
தஞ்சாவூரில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா தலைமையில் நடைபெற்றது. இதில், அரசுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
விவசாயிகள் கூறியது, திருக்காட்டுப்பள்ளி, நடுப்படுகை, வளப்பக்குடி, கண்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பல நூறு ஏக்கரில் பொங்கல் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். இந்தக் கரும்புகளை, தமிழக அரசு பொங்கல் தொகுப்பிற்கு கொள்முதல் செய்து, கடந்தாண்டுகள் போல் இல்லாமல், நிகழாண்டு ஒரு கருப்புக்கான விலையை அரசு ஆணையாக வெளியிட வேண்டும். இதே போல் அந்த தொகுப்புடன் கரும்பு, 5 தேங்காய், வெல்லம் மற்றும் ரூ. 3 ஆயிரம் வழங்க வேண்டும். மேட்டூர் அணை மூடிய நிலையில், நெல்லுக்கான பயிர் காப்பீடு செய்த தொகையை வழங்க உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
இதே போல் பயிர் காப்பீட்டிற்கான தொகை செலுத்தாத கிராமங்களுக்கு சென்று, அங்குள்ள விவசாயிகளையும் காப்பீட்டிற்கான தொகை செலுத்த வலியுறுத்தி, அவர்களுக்கு பெற்றுத் தர வேண்டும். இதனை வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு அறிவிக்க வேண்டும். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காமல் விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக அந்தத் தொகையை வழங்க வேண்டும். குருங்களூர் சர்க்கரை ஆலைக்குச் செல்லும் சாலை 10 ஆண்டுகளாக மோசமாக உள்ளதைச் சீர் செய்ய வேண்டும். இந்த ஆலைக்கான கரும்பு வெட்டுக் கூலியை அரசே ஏற்க வேண்டும். தோழகிரிப்பட்டி திருப்பத்தில் உள்ள பள்ளத்தில், அதிகபாரத்துடன் கரும்பு ஏற்றி வரும் வாகனங்கள் கவிழ வாய்ப்புள்ளதால், அந்தப் பள்ளத்தை மூட வேண்டும்.
இதே போல் அந்தப் பகுதியில், இலவச மின்சாரத்திற்காக மின்கம்பம் நடப்பட்டு, மின் இணைப்பு வழங்காமல் அண்மைக்காலமாக உள்ளதால், உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும். தற்போது சாகுபடி செய்துள்ள நெற்பயிரில் குருத்துப்பூச்சி, இலைச் சுருட்டுப்புழுக்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அந்தப்பூச்சிகளை அழிக்க வேளாண்மைத்துறையினர் உரிய ஆலோசனை வழங்க வேண்டும். மின் மோட்டாரினால் சாகுபடி மேற்கொள்ளப்பட்ட நெற்பயிர்கள், பால் மற்றும் குருத்துப் பருவத்தில் இருப்பதால், அந்தப் பயிருக்கு தற்போது தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என்பதால், உடனடியாக மேட்டூர் அணையைத் திறக்க வேண்டும் அல்லது மும்முனை மின்சாரத்தை தடையின்றி வழங்க வேண்டும்.
பட்டா பெறுவதற்காக விவசாயிகள், அரசு அலுவலகங்களுக்குச் சென்றால், மதிக்காமல், அலைக்கழிப்பதை தவிர்க்க வேண்டும். ஒரத்தநாடு மின் அலுவலகத்தில் மின் தொடர்பான புகார் அளித்தால், பணியாளர்கள் பற்றாக்குறையாக உள்ளனர் என பதில் கூறுகின்றனர். எனவே, அங்கு போதிய பணியாளர்களை நியமனம் செய்து, மின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். திருவோணம், நெம்மேலி புதூரில், கடந்த 2018-ம் ஆண்டு கஜா புயலினால், மின்விளக்குகள் சேதமடைந்தன. அதன் பிறகு இது நாள் வரை, மின் விளக்குகள் இல்லாமல் உள்ளது. இதே போல் சாலைகள் அமைத்து சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாவதால், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒரத்தநாட்டில், கடந்தாண்டு சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெற்பயிர் சாகுபடி செய்திருந்தனர். நிகழாண்டு மின்மோட்டார் நீரைக் கொண்டு சுமார் 6 ஆயிரம் ஏக்கர் மட்டும் சாகுபடி செய்துள்ளனர்.
எனவே, தற்போது சாகுபடி மேற்கொண்டுள்ள விவசாயிகள் தொடர்பாக உரிய கணக்கீடு செய்ய வேண்டும். கல்லணைக் கால்வாய் உள்ளிட்ட அனைத்து வாய்க்கால்களின் ஓரத்தில் உள்ள வயல்களில் நீர் ஊறுவதற்காக, அந்த வாய்க்காலின் தரையில் சிமெண்ட் தளம் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒரத்தநாடு பேரூராட்சியிலிருந்து வெளியேறும் கழிவு நீரை, வன்னிப்பட்டு வாய்க்கால்களில் விடுவதை தடுக்க வேண்டும், அந்தப் பகுதியில் காவலர் உதவி மையம் அமைக்க வேண்டும், ஒரத்தநாடு பேருந்து நிலையத்தில் சுகாதார வளாகம் கட்ட வேண்டும் என அனைத்து அதிகாரிகளுக்கு புகாரளித்தும் பலனில்லாமல் உள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
திருவோணத்தில் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள், குழந்தைகள் என அனைவரும் அவதிப்பட்டு வருவது குறித்துக் கடந்த கூட்டங்களில் வலியுறுத்தியும், இது நாள் நடவடிக்கை மேற்கொள்ள வில்லை. இதே போல் சுமார் 100 ஏக்கரில் கடலை சாகுபடி மேற்கொண்டுள்ள நிலையில், 4 நாட்களில் பூ விடும் பருவத்திற்கு அந்த கடலைச் செடி வளர்ந்து விடுவதால், தட்டுப்பாடின்றி போதிய அளவில் ஜிப்சம் உரம் வழங்க வேண்டும். வேளாண்மைத்துறை மூலம் வழங்கப்படும் கடலை விதைகள் மிகவும் மோசமாக குப்பையில் வீசும் நிலையில் அந்த விதைகளை வழங்குகிறார்கள். ஆனால் தனியாரிடம் தரமான விதைகளாக உள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த கோட்டாட்சியர் எஸ்.இலக்கியா கூறியது, விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்து அந்தத் துறைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.