திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அவை அனைத்தும் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய தீர்வு காணப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை வேண்டியும், சாலை வசதி, குடிநீர் வசதி வேண்டியும் என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 261 மனுக்களை பெற்றுக் கொண்டதுடன் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரனை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சி தலைவர் கிறிஸ்துராஜ் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனம் சார்பில் சிறப்பு விற்பனையை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், பொதுமேலாளர் (ஆவின்) சுஜாதா, மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) திருக்குமரன், தனித்துறை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) மலர், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் புஷ்பாதேவி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் குமாரராஜா, துணைப்பதிவாளர் (பால்வளம்) கணேஷ், மேலாளர் (விற்பனைப்பிரிவு) சரண்யா, உதவிப் பொதுமேலாளர் மற்றும் ஒன்றிய அலுவலர் ரமேஷ், துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.