வரத்து அதிகரிப்பால் சேலத்தில் குண்டுமல்லி விலை சரிவு
சேலத்தில் வரத்து அதிகரிப்பால் குண்டு மல்லி விலை சரிந்து காணப்படுவதால் அதிக அளவில் விற்பனையானது.
சேலம் கடைவீதியில் வ.உ.சி. பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு கன்னங்குறிச்சி, பனமரத்துப்பட்டி, மல்லூர், ஓமலூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குண்டுமல்லி, சன்னமல்லி, சாமந்தி, ஜாதிமல்லி, சம்பங்கி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை தினமும் விவசாயிகளும், வியாபாரிகளும் விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை குண்டுமல்லி விளைச்சல் குறைந்திருந்ததால் அதன் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டது. அதாவது ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.2 ஆயிரம் வரை விற்கப்பட்டது. இந்த நிலையில் சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டிற்கு தற்போது குண்டுமல்லி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அதன்விலை கடுமையாக சரிந்துள்ளது. நேற்று காலை ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.240-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதனால் பொதுமக்களும், சில்லரை பூ வியாபாரிகளும் குண்டுமல்லியை அதிகளவில் வாங்கி சென்றனர். இதன் காரணமாக நேற்று வ.உ.சி. மார்க்கெட்டில் பூக்களின் வியாபாரம் மும்முரமாக நடந்தது. வரத்து அதிகரிப்பு மற்றும் வெயிலால் பூக்களின் தரம் குறைந்து காணப்படுவதால் விலை சரிந்துள்ளதாக பூ வியாபாரிகள் தெரிவித்தனர்.
குண்டுமல்லியை தொடர்ந்து சன்னமல்லியும் ஒரு கிலோ ரூ.240-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் ஒரு கிலோ முல்லை ரூ.200, காக்கட்டான் ரூ.240, சம்பங்கி ரூ.80, அரளி ரூ.160, நந்தியாவட்டம் ரூ.200, ரோஜா ரூ.200, சாமந்தி ரூ.300-க்கும் விற்பனை செய்யப்பட்டது. சேலத்தில் குண்டுமல்லி, சன்னமல்லி போன்ற பூக்களின் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.