பேருந்தில் குட்கா கடத்தியவர் கைது
திருத்தணியில் பேருந்தில் கடத்திவரப்பட்ட குட்கா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
Update: 2024-03-04 15:29 GMT
ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் திருத்தணி பகுதிக்கு கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருவள்ளூர் எஸ்.பி., சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில், தமிழக, ஆந்திரா மாநில எல்லையான பொன்பாடி சோதனைச் சாவடியில் திருத்தணி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, நகரியில் இருந்து திருத்தணி நோக்கி வந்த அரசு பேருந்து தடம் எண்: 201ல் போலீசார் சோதனை நடத்திய போது, ஒரு பயணியிடம் பையில், 10 கிலோ குட்கா பொருட்கள் இருந்ததைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், குட்கா கடத்தி வந்தவர் தென்காசி மாவட்டம், சிவகிரி தாலுகா, மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், 34 என தெரிந்தது. போலீசார் சதீஷ்குமாரை கைது செய்தனர்.