இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு மாற்றுத்திறனாளிகள் மனு
Update: 2023-11-07 05:14 GMT
டிசம்பர் 3 இயக்கம் மற்றும் புதிய அலை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பினர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலம் வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளாகிய நாங்கள் இலவச வீட்டுமனை கேட்டு மனு கொடுத்துள்ளோம். ஆனால் மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் எங்கள் அமைப்பின் மூலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினோம். எங்களுடைய மனுக்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் வந்துள்ளது. எங்கள் மனுக்களை சரியாக பரிசீலனை செய்யாமலும், எங்களிடம் எந்த தகவலும் பெறாமல் மனுக்களை நிராகரித்து விட்டனர். ஆகவே எங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற மாவட்ட கலெக்டர் சி.பழனி, இதுகுறித்து பரிசீலனை செய்வதாக கூறினார்.