கண்ணாடி இழையைச் சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை
மின் கம்பங்கள் வழியாகக் கொண்டு செல்ல தடை செய்யும் நபர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என எச்சரிக்கை செய்யப்படுகிறது
Update: 2023-12-20 01:15 GMT
தஞ்சாவூர் மாவட்டத்தில் கண்ணாடி இழையைச் சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 589 ஊராட்சிகளிலும் அதிவேக இணையதள சேவை வழங்குவதற்காக பாரத் நெட் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் இணைய வசதி வழங்கப்படவுள்ளது. தற்போது, 588 ஊராட்சிகளில் இணைய வசதி வழங்கத் தயார் நிலையில் உள்ளது. இத்திட்டம் முழுமையான செயல் பாட்டுக்கு வரும்போது, ஒவ்வொரு ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் அதிவேக இணையதள வசதிகளைப் பெற முடியும். கண்ணாடி இழையை 85 சதவீதம் ஏற்கெனவே பயன்பாட்டி லுள்ள மின் கம்பங்கள் மூலமாகக் கொண்டு செல்வதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிலர் தங்களுக்குச் சொந்தமான நிலங்களில் கண்ணாடி இழையைக் கொண்டு செல்லக்கூடாது என தடை செய்கின்றனர். கண்ணாடி இழை மின்சாரத்தைக் கடத்தாது என்பதால், அதை மின் கம்பங்கள் மூலம் கொண்டு செல்ல பொதுமக்கள் தடை செய்யக் கூடாது. மேலும், விளைநிலங்களில் உள்ள மின் கம்பங்கள் வழியாக கண்ணாடி இழைகள் இணைக்கப்படும்போது, பயிர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. கண்ணாடி இழையில் எந்தவிதமான உலோகப் பொருள்களும் இல்லை என்பதால், அதை திருடிச்சென்று காசாக்கலாம் என்ற தவறான புரிதலும் வேண்டாம். ஒவ்வொரு ஊராட்சியிலும் பொருத்தப்பட்டுள்ள யு.பி.எஸ். ரூட்டர், ரேக் போன்ற கண்ணாடி இழை வலையமைப்பு உபகரணங்கள் அரசின் உடைமைகள். இதைச் சேதப்படுத்தும் அல்லது திருடும், கண்ணாடி இழைகளைத் துண்டாக்கும், மின் கம்பங்கள் வழியாகக் கொண்டு செல்ல தடை செய்யும் நபர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என எச்சரிக்கை செய்யப்படுகிறது" என்றார்.