சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றது
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், விருதுநகரில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் நடந்தது.;
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், விருதுநகரில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் நடந்தது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்,மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசிலன் தலைமையில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றது.
பொது சுகாதாரத்துறையின் சேவைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்க வேண்டுமானால், சமுதாயத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். எனவே அனைத்து குடிமக்களின் சுகாதார உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றிய புரிந்துணர்வு மேம்பாட்டிற்காக மாநில மற்றும் மாவட்ட சுகாதார பேரவையை தமிழக அரசு செயல்படுத்தி கொண்டிருக்கிறது. அந்தந்த சமுதாயத்தில் உள்ள சுகாதார சிக்கல்கள் மற்றும் தேவைகளை கண்டறிதலும், சுகாதார பங்கீட்டாளர்களுக்கும் சமுதாயத்திற்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்துதலும் இதன் முக்கியமான நோக்கமாகும். ஏழை எளிய மக்களுக்கு தொழில்நுட்பம் சார்ந்த மருத்துவ அறிவியல் புரியாத சூழ்நிலையில் அவர்களுக்கு புரிய வைத்து, இந்த மருத்துவத்தை செய்யக்கூடிய சவாலான பணி நமது சமூகத்தில் இருக்கிறது. தற்போது பெரும்பாலானோர் படித்து விழிப்புணர்வோடு இருக்கிறார்கள்.
இதற்கு முந்தைய தலைமுறையினர்களுக்கு இது இன்னும் சவாலாக இருந்திருக்கும். தற்போது கூட நிறைய சவால்கள் இருக்கின்றன. இன்றைய சூழ்நிலையில் கூட ஒவ்வொரு கிராமத்திலும் மனநோய், கை, கால் செயலிழப்பு உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க முடிகிறது. அவர்களுக்கு நவீன மருத்துவத்தின் மூலமாக அந்த நோயினை சரி செய்ய முடியும். மகப்பேறு, குழந்தைப்பேறு, பெண்கள் எதிர்கொள்ளக்கூடிய இன்னல்கள் சார்ந்து பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள சுமார் 70 சதவிகித பெண்களை ஒருங்கிணைக்க கூடிய அமைப்பாக மகளிர் சுய உதவி குழுக்கள் இருக்கிறது. அதில் உள்ள ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலம் விழிப்புணர்வை பெண்களுக்கு எடுத்துச் செல்ல முடியும். சுகாதாரம் என்பது ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளுடைய மிக அடிப்படையான கடமை. சட்டபூர்வமான அதிகாரமும், கடமையும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இருக்கிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகளின் நிதியிலிருந்து அரசு சுகாதார நிலையங்களுக்கு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. சுகாதார நிலையத்தின் உட்கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதியை மேம்படுத்த அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் முன்னுரிமை தர வேண்டும். ஏறத்தாழ 90 சதவீத மக்களில் நடுத்தர மற்றும் அதற்கும் கீழே இருக்கக்கூடிய சமூகத்தில், அரசு மருத்துவமனைக்கு வரக்கூடிய மக்கள் தொகை 50 லிருந்து 60 விழுக்காடாக உள்ளது. இடையில் இருக்கக்கூடிய 20 முதல் 30 விழுக்காடு மக்கள், அவர்களுடைய வருமானத்திலிருந்து உடல் நலத்திற்காகவும், சுகாதாரத்திற்காகவும் செலவு செய்யக்கூடிய நிலை இருக்கிறது. இது போன்ற வசதிகளை கூட்டுவதன் மூலமாக அந்த குறைந்த வருவாய் பிரிவில் இருக்கக்கூடிய மக்களின் தேவைகளை நாம் பூர்த்தி செய்ய முடியும்.
இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கமே பொதுமக்களினுடைய பிரதிநிதிகளான உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுடைய பங்களிப்பு வேண்டும் என்பதுதான். மருத்துவ சேவைகள் வழங்குவதில் உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும். அப்போதுதான் இன்னும் நிறைய பேருக்கு தரமான சேவைகளை வழங்க முடியும். எனவே மாவட்டத்தில் இருக்கக்கூடிய பல்வேறு தரப்பினர்களும் பங்களித்து, இந்த சுகாதார சேவைகளினுடைய தரத்தை உயர்த்த வேண்டும். மருத்துவ வசதிகள் அனைத்தையும் எடுத்துச் செல்வதற்கு உள்ளாட்சி அமைப்புகளும், அரசு துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது முக்கியம் என தெரிவித்தார்.