சுகாதாரக் குறைபாடு: ஐஸ் நிறுவனத்துக்கு சீல்!
கழுகுமலையில் சுகாதாரக் குறைபாடுகளுடன் செயல்பட்ட ஐஸ் நிறுவனத்துக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனா்.
தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலா் ச. மாரியப்பனுக்கு வாட்ஸ்ஆப் மூலம் புகாா் வந்ததையடுத்து, அவரது உத்தரவின் பேரில், கயத்தாறு ஒன்றிய உணவுப் பாதுகாப்பு அலுவலா் (பொ) ஜோதிபாசு, சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் சோதனை நடத்தி அறிக்கை அளித்தாா். அதன்பேரில், அந்த ஐஸ் நிறுவனத்துக்கு எச்சரிக்கை அறிவிப்பு கொடுத்தும் தொடா்ந்து சுகாதார குறைபாடுடன செல்படுவது தெரியவந்தது. இதையடுத்து நியமன அலுவலா் உத்தரவின்படி, காவல் துறை பாதுகாப்புடன் அந்நிறுவனம் மூடி சீலிடப்பட்டது.
அதன் உரிமையாளா் தமிழரசனிடம் விசாரித்து தொடா் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். ‘விதிமுறை மீறினால் உரிமம் ரத்து’:ஐஸ் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மிகவும் சுகாதாரமானதாக இருக்க வேண்டும். தயாரிப்பு பணி முடிந்து, பொட்டலமிட்டவுடன், அதன் தயாரிப்பு தேதியுடன் கூடிய லேபிள் விவரங்கள் முழுமையாக அச்சிடப்பட்டிருக்க வேண்டும். பணியாளா்களுக்கு வருடாந்திர மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு, ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். மூலப் பொருள்கள், தயாரித்த உணவுப் பொருள்களின் கணக்கு விவரத்தை நிறுவனத்தினுள் பராமரிக்க வேண்டும். தண்ணீா் பகுப்பாய்வறிக்கை மிக அவசியம். இவ்விதிமுறைகளைப் பின்பற்றாத ஐஸ் நிறுவனங்களின் உணவுப் பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் இடைக்கால ரத்து செய்யப்படும். இதுதொடா்பான புகாா்களுக்கு வாட்ஸ்ஆப் எண். 9444042322 (மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையா் அலுவலகம்) அல்லது செயலி அல்லது இணையதளத்தை தொடா்புகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.