தேர்தல் பணிக்கு வாடகை வாகனங்கள் பயன்படுத்த வேண்டும்
கன்னியாகுமரி மாவட்ட மோட்டார் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் தேர்தல் பணிக்கு வாடகை வாகனங்கள் பயன்படுத்த வேண்டும் என மனு அளித்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட மோட்டார் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் அதன் நிர்வாகிகள் நேற்று மாலை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழ்நாட்டில் அரசின் தேர்தல் பணிகளுக்காக வாடகை வாகனங்கள் எடுத்து இயக்க ஏற்பாடு உள்ளது. இதற்கு வாடகை வாகனங்களை டாக்ஸி மட்டும் பயன்படுத்த வேண்டும்.
இந்நிலையில் விதிகளுக்கு புறம்பாக தனியார் ஓன் பர்மிட் வாகனங்களை தேர்தல் பணிக்கு வாடகைக்கு அமர்த்தி உள்ளதாக தெரிய வருகிறது இது சட்டத்திற்கு புறம்பான செயலாகும். மேலும் வாடகைக்கு எடுக்கும் வாகன உரிமையாளர்களுக்கு வாகனத்தின் வாடகை விவரம், எரிபொருள் விநியோகம் மற்றும் தினசரி படி (பேட்டா) இன்ன பிற விவரங்களையும் எழுத்துப்பூர்வமாக வழங்கிட வேண்டும் எனவும் கேட்டு, வாடகை தொகையை உரிய நேரத்தில் கிடைத்திட ஆவன செய்ய வேண்டும் எனவும் கேட்டு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மனு அளிக்கப்பட்டது.
மனுக்களுடைய நகல் தமிழக தலைமை தேர்தல் அலுவலர், போக்குவரத்து ஆணையர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர், சாலை போக்குவரத்து சம்மேளன சி ஐ டியு பொதுச் செயலாளர், மாவட்ட சிஐடியு செயலாளர் ஆகியோருக்கும் அளிக்கப்பட்டுள்ளது. இம்மனுவை மோட்டார் சங்க (சிஐடியு) மாவட்ட தலைவர் பொன்.சோபனராஜ், செயலாளர் பிரேம் ஆனந்த், பொருளாளர் ஆசீர் மற்றும் பெரோஸ் கான், விபின், ஜேசுராஜ், ராஜா உட்பட தொழிலாளர்கள் கோரிக்கை மனுவினை நேரடியாக அளித்தனர்.