மாநில எல்லை சோதனை சாவடிகளில் பணம் கேட்டால் லாரிகளை நிறுத்தி போராட்டம்
அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா நேற்று சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்த உடனே மாநில எல்லையில் வட்டார போக்குவரத்து சோதனை சாவடிகளை அகற்ற மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் மட்டும் இந்த சோதனை சாவடிகள் அகற்றப்பட்டன. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்பட சில மாநிலங்களில் உள்ள சோதனை சாவடிகள் அகற்றப்படாமல் உள்ளன.
இந்த சோதனை சாவடிகளில் அனைத்து ஆவணங்களும் முறையாக இருந்தாலும் குறிப்பிட்ட அளவு பாரம் ஏற்றி வந்தாலும் லஞ்சமாக பல ஆயிரம் ரூபாய் வரை கேட்கிறார்கள். வட்டார போக்குவரத்து சோதனை சாவடிகளை அகற்ற வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். வருகிற 25-ந் தேதி முதல் வட்டார போக்குவரத்து சோதனை சாவடிகளில் பணம் கொடுப்பதில்லை என்று முடிவு செய்துள்ளோம்.
மீறி பணம் கேட்டால் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவோம். தமிழகத்தில் உள்ள 26 சுங்கச்சாவடி உள்பட நாடு முழுவதும் 114 சுங்கச்சாவடிகள் காலாவதியாகி விட்டன. அந்த சுங்கச்சாவடிகளில் பராமரிப்பு கட்டணம் 40 சதவீதம் தான் வசூலிக்க வேண்டும் என்று உள்ளது. ஆனால் அங்கு முழு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடிகள் மூலம் ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் கோடி வரை வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.