சிறார் திருமணம் கண்டறியப்பட்டால் 2 ஆண்டு சிறை - ஆட்சியர் எச்சரிக்கை
குழந்தை திருமணம் நடைபெறுவது கண்டறியப்பட்டால் தொடர்புடையவர்களுக்கு 2 வருடம் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குழந்தை திருமணங்களை தடுத்தல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- குழந்தை திருமணத்தால், அவர்களின் எதிர்காலம், உடல் நலம், கல்வி ஆகியவை கிடைக்காமல் குழந்தைகளின் முன்னேற்றம் தடைபடுகிறது.
எனவே குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பான சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தை திருமணங்களை தடுக்க மாவட்ட அளவில் குழு செயல்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின்கீழ் பணிபுரியும் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் தங்கள் பகுதிகளில் குழந்தை திருமணம் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. எ
னவே குழந்தை திருமணம் நடைபெறுவது கண்டறியப்பட்டால் தொடர்புடையவர்களுக்கு 2 வருடம் சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை பள்ளி, கல்லூரி, கிராம சபைக் கூட்டங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழந்தை திருமணத்திற்கு பள்ளி இடைநிற்றல் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவிகளின் பள்ளி இடைநிற்றல் விவரங்களை தெரிந்து பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி பள்ளி படிப்பை தொடர செய்வதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், மாவட்ட சமூக நல அலுவலர் சுகந்தி, கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு அண்ணாதுரை, சுகாதார பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள் உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.