வைகை ஆற்றில் ஆர்ப்பரித்து வந்த தண்ணீர்

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால் வறண்ட வைகை ஆற்றில் ஆர்ப்பரித்து வந்த தண்ணீரை கண்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.;

Update: 2024-05-13 15:35 GMT

ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

 தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் வெப்பத்தால் மக்கள் தவித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. 

குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று நள்ளிரவு வைகை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளான வெள்ளிமலை, பொம்மராஜபுரம், அரசரடி, மேகமலை, உள்ளிட்ட வனப் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழை காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக வரண்டு மணல்மேடாக காட்சியளித்த வைகை ஆற்றில் திடீரென தண்ணீர் ஆர்ப்பரித்து வந்தது.

Advertisement

வறண்ட வைகையில் தண்ணீர் வருவதை கண்ட விவசாயிகளும் பொதுமக்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடையில் கை கொடுத்த மழையால் வைகை ஆறு உற்பத்தியாகும் வருஷநாடு பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை அடியோடு நீங்கி உள்ளது. 

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து கோடை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் இனி வரும் நாட்களில் மழை பெய்யும் பட்சத்தில் வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

Tags:    

Similar News