சேலத்தில் ஒரு மூட்டை எலுமிச்சை பழங்கள் ரூ.3,400-க்கு விற்பனை
சேலத்தில் ஒரு மூட்டை எலுமிச்சை பழங்கள் ரூ.3,400-க்கு விற்பனையாகின. வரத்து குறைவால் விலை அதிகம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
By : King 24x7 Angel
Update: 2024-03-23 09:13 GMT
ஆந்திரா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் இருந்தும், திருச்சி, புளியங்குடி ஆகிய பகுதிகளில் இருந்தும் சேலத்திற்கு எலுமிச்சை விற்பனைக்கு வருகிறது. சேலம் செவ்வாய்பேட்டை, அப்சரா இறக்கம் பகுதியில் எலுமிச்சை மொத்த வியாபார மார்க்கெட் உள்ளது. இங்கிருந்து வியாபாரிகள் மூட்டை, மூட்டையாக விற்பனைக்காக பல்வேறு இடங்களுக்கு வாங்கிச்செல்வார்கள். நேற்று சேலத்தில் ஒரு மூட்டை எலுமிச்சை ரூ.3,400-க்கு விற்கப்பட்டன. இதனால் ஒரு எலுமிச்சை ரூ.8-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து எலுமிச்சை மொத்த வியாபாரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:- இந்த ஆண்டு மராட்டிய மாநிலத்தில் மழை மிகவும் குறைவாக பெய்ததால் அங்கு எலுமிச்சை விளைச்சல் அதிகம் இல்லை. இதனால் மராட்டியத்தில் இருந்து சேலத்திற்கு எலுமிச்சை கடந்த சில மாதங்களாகவே வரவில்லை. ஆந்திராவில் இருந்து மட்டுமே எலுமிச்சை விற்பனைக்கு வருகின்றன. சேலத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் மட்டுமே எலுமிச்சை மொத்த வியாபாரம் நடக்கும். இன்று (நேற்று) முதல் தர எலுமிச்சை ஒரு மூட்டை ரூ.3,400-க்கு விற்கப்பட்டன. அதன்படி ஒரு எலுமிச்சை ரூ.8-க்கு விற்பனை ஆகின. இது சற்று விலை அதிகம் தான். காரணம் வரத்து குறைவால், விலை அதிகம். இந்த நிலை இன்னும் 3 மாதம் நீடிக்கும். இவ்வாறு கூறினர்.