ராசிபுரம் ரோட்டரி கிளப் சார்பில் நிழற்கூடம், உள்நோயாளிகள் அறை திறப்பு விழா..
திறப்பு விழா
ராசிபுரம் ரோட்டரி கிளப் சார்பில் சிங்களாந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.4.10 லட்சம் மதிப்பிலான மருத்துவமனை பயனாளிகள் நிழற்கூடம், சீரமைக்கப்பட்ட உள் நோயாளிகள் அறை அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழா மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவிற்கு ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் பி.சீனிவாசன் தலைமை வகித்தார். செயலர் ஆர்.ஆனந்தகுமார் வரவேற்றார். ரோட்டரி உதவி ஆளுநர் ஏ.ராஜூ, முன்னாள் உதவி ஆளுநரும், நன்கொடையாளருமான எஸ்.சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ரோட்டரி மாவட்டத்தின் ஆளுநர் எஸ்.ராகவன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று நிழற்கூடம், உள்நோயாளிகள் அறை கல்வெட்டை திறந்து வைத்துப் பேசினார்.
விழாவில் பேசிய அவர், ரோட்டரி மாவட்டத்தின் மூலம் நடப்பு ஆண்டில் ரூ.75 மதிப்பில் மகளிருக்கான இலவச தையல் எந்திரம் வழங்கப்படும். இதே போல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள உணவு விடுதிகளின் பணியாளர்கள், கோவில்,தர்கா, தேவாலயங்கள் முன்பாக உள்ள சிறு வியாபாரிகள் பயனடையும் வகையில் ரூ.10 லட்சம் மதிப்பில் 1000 நிழற்குடைகள் போன்றவை வழங்கப்படும்.
மேலும் காவேரி மருத்துவமனை உதவியுடன் மொத்தம் ரூ.1 கோடியே 35 லட்சம் மதிப்பில் மகளிருக்கு புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் நடமாடும் வாகனம் வாங்கப்பட்டுள்ளது. விரையில் இது பயன்பாட்டிற்கு வரும். ரோட்டரி சங்கத்தின் மூலம் மகளிருக்கு வழங்கப்படும் தையல் எந்திரங்கள், புற்று நோய் பரிசோதனை நடமாடும் வாகனம் போன்றவற்றை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் ரோட்டராக்ட் கிளப் துவங்க முயற்சி மேற்கொள்ளும் சங்கத்திற்கு பசு,கன்று வழங்கப்படும். அதே போல் ரோட்டரி மாவட்ட அளவில் மலைபகுதிகள், கிராமங்களில் 25 தடுப்பணைகள் கட்டும் திட்டமும் உள்ளது என ரோட்டரி ஆளுநர் தெரிவித்தார்.
விழாவில் திட்டத்திற்கு ரூ.1லட்சம் நன்கொடை வழங்கிய நன்கொடையாளர்கள் எஸ்.சத்தியமூர்த்தி, ரூ.60 ஆயிரம் நன்கொடை வழங்கிய வி.ஆர்.எஸ்.
ஆனந்தகுமார் குடும்பத்தினர் நினைவு பரிசளித்து கெளரவிக்கப்பட்டனர்.விழாவில், ரோட்டரி திட்ட ஒருங்கிணைப்பாளர் எல்.சிவக்குமார், துணைத் தலைவர் இ.ஆர்.சுரேந்திரன், பொருளாளர் கே.தண்டாயுதபாணி, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ரகோத்தமன் உள்ளிட்ட ரோட்டரி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.