பேராவூரணியில் ரயில் முன்பதிவு மையம் துவக்கம்
பேராவூரணி ரயில் நிலையத்தில், ரயில்வே முன்பதிவு மையம் துவக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ரயில் நிலையத்தில், ஏற்கனவே மீட்டர் கேஜ் ரயில் சேவை காலத்தில் ரயில் முன்பதிவு மையம் இயங்கி வந்தது. காரைக்குடி - திருவாரூர் அகல ரயில் பாதை பணிகளுக்காக கடந்த 2012 ஆம் ஆண்டு இந்த வழித்தடத்தில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டு, அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு டெமு ரயில் சேவை தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. தற்போது இவ்வழியாக காரைக்குடி - திருவாரூர் - தாம்பரம் ரயில் உள்ளிட்ட, ஒரு சில சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 2012 ஆம் ஆண்டு வரை ரயில்வே முன்பதிவு மையம் பேராவூரணி ரயில் நிலையத்தில் இயங்கி வந்தது. 2022 இல் மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்ட பிறகு, முன்பதிவு மையம் அமைக்கப்படாமல் இருந்தது.
இது குறித்து பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினரும், வர்த்தகர் கழக முன்னாள் தலைவருமான நா.அசோக்குமார், நகர வர்த்தகர் கழகம், கிழக்கு கடற்கரை ரயில் பணிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் சாமி.திராவிட மணி, ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஆர்.எம். பாலசுப்பிரமணியன், வி.ஆர்.ராமநாதன், பேராவூரணி ரயில் பயணிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், மீண்டும் பேராவூரணி ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் அமைக்க வேண்டும். விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் ஏப்ரல் 5 வெள்ளிக்கிழமை முதல் பேராவூரணி ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம், தென்னக ரயில்வே துறையால் மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த முன்பதிவு மையம் இயங்கும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் புதிய மீண்டும் முன்பதிவு மையம் திறக்கப்பட்டதை தொடர்ந்து நகர வர்த்தகர் கழக தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், பொருளாளர் சாதிக் அலி, கட்டுப்பாட்டு கமிட்டி உறுப்பினர் எஸ்.கந்தப்பன், வர்த்தகர் கழக நிர்வாகி சீனி.கௌதமன், லயன்ஸ் சங்க தலைவர்கள் தெட்சிணாமூர்த்தி, சிவநாதன் உள்ளிட்டோர் பயணிகளுக்கு இனிப்பு வழங்கியும், ரயில் பயணச் சீட்டுக்கு முன்பதிவு செய்தும் வரவேற்பு தெரிவித்தனர்.