கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் சார்பில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
காங்கேயம் வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்க பணியாளர்கள் சார்பில் 15 மாணவ மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம்கோவை சாலையில் இயங்கி வரும் காங்கேயம் வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் பணியாளர்கள் சார்பில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகையாக தலா ரூ.10 ஆயிரம் வழங்கும் நிகழ்வு நேற்று காங்கேயம் வட்ட கூட்டுறவு சங்க வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு காங்கேயம் வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்க செயலாளர் பி. செல்வராஜ் தலைமை தாங்கினார்.மேலும் சங்கத்தின் மேலாளர் வி. சந்திரசேகரன் வரவேற்புறை ஆற்றினார். காங்கேயம் வள்ளலார் மன்றம் செயலாளர் எஸ். ஈஸ்வரமூர்த்தி, சங்கராபுரம் வீட்டு வசதி சங்க செயலாளர் டீ. தண்டபாணி, ஈரோடு வீட்டு வசதி சங்க செயலாளர் டீ. செல்வக்குமார், காங்கேயம் ரோட்டரி பொருளாளர் கே.ஆர்.பி. ஆயில் மில் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதனை தொடர்ந்து கடந்த 6 ஆண்டுகளாக காங்கேயத்தில் ஆண்டு தோறும் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நடத்தி ஊக்கத்தொகை வழங்குவது வழக்கம். அதே இந்த ஆண்டும் காங்கேயம், வந்தவாசி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, திருவாரூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. இதனை அடுத்து இந்த குழந்தைகளை தேர்வில் சிறந்து விளங்க ஆயத்தப்படுத்திய அவர்களது பெற்றோர்களுக்கும் பாராட்டுகளும் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டது. முடிவில் வீட்டுவசதி சங்க உதவி செயலாளர் கே. கந்தசாமி நன்றியுரை தெரிவித்தார்.