ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
ஏற்காட்டில் நிலவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் இயற்கை எழில் கொஞ்சும் அழகை காணமுடியும். இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். கடந்த ஒரு வாரமாக ஏற்காட்டில் தினமும் மழை பெய்து வருவதால் அங்கு வெப்பம் தணிந்து கடும் குளிர் நிலவுவதோடு சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக ஏற்காட்டிற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
அவர்கள் ஏற்காடு மலையில் உள்ள காட்சி முனைப்பகுதிகளான லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பக்கோடா பாயிண்ட், கரடியூர் உள்ளிட்ட இடங்களையும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அண்ணா பூங்கா, சிறுவர் பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம், மான்பூங்கா என அனைத்து பூங்காக்களிலும் நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் காணப்பட்டது. ஏற்காடு ஏரியில் உள்ள படகு துறையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர்.
சுற்றுலா பயணிகள் வருகையால் ஏற்காட்டில் அனைத்து வியாபார கடைகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் கடை வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதாவது, வருகிற 22-ந் தேதி கோடை விழா-மலர் கண்காட்சி தொடங்கி 26-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இதனால் அந்த நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் மேற்பார்வையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.