சுயேட்சை வேட்பாளர் போஸ்டர் முத்துச்சாமி வேட்புமனு தாக்கல்

நாட்டில் தற்போது ஜனநாயகப்படுகொலை நடைபெறுகிறது. இதனை தடுத்து ஜனநாயகம் மிளரவும், மகளிர் உரிமை நிலை நாட்டவும் தேர்தலில் போட்டியிடுகிறேன் என சுயேட்சை வேட்பாளர் போஸ்டர் முத்துச்சாமி தெரிவித்தார்.

Update: 2024-03-21 01:33 GMT

வேட்புமனு தாக்கல்

மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் முதல் நாளாக நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்வதற்காக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தன. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டிற்கான மதுரை நாடாளுமன்ற தொகுதியின் முதல் சுயேட்சை வேட்பாளராக மதுரை செல்லூரை சேர்ந்த போஸ்டர் முத்துச்சாமி என்பவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்வதற்காக 10.59 மணிக்கு நேர்த்தியாக வருகை தந்தார்.

பின்னர் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துவிட்டு முதல் வேட்பாளராக மாவட்ட தேர்தல் அலுவலர் சங்கீதாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். சுயேட்சை வேட்பாளரான போஸ்டர் முத்துச்சாமி மாற்று வேட்பாளருடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். மதுரை செல்லூரை சேர்ந்த சுயேட்சை வேட்பாளரான முத்துச்சாமி போஸ்டர் ஒட்டும் தொழிலில் ஈடுபட்டுவருகிறார். அப்போது அரசியல் ரீதியான கூட்டங்கள், கோரிக்கைகள் ,கண்டன போஸ்டர்களை ஒட்டும்போது அரசியல் மீதான ஆர்வம் வரத்தொடங்கியதால் கடந்த 2023 ஆம் ஆண்டு முதலே மதுரை நாடாளுமன்ற தேர்தலின் முதல் வேட்பாளர் என அச்சிட்டு சுவர் விளம்பரங்களை மதுரை மாநகர் முழுவதும் செய்துவந்தார்.

மேலும் மதுரை எய்ம்ஸ் தொடங்கி பல்வேறு மக்கள் பிரச்சனைகள் தொடர்பாக போஸ்டரை ஒட்டி அதில் மதுரை நாடாளுமன்ற தொகுதி முதல் வேட்பாளர் போஸ்டர் முத்துச்சாமி என பெயரை அச்சிட்டு ஒட்டிவைத்துவருகிறார். போஸ்டர் ஒட்டும் தொழிலில் ஈடுபட்டுவந்த முத்துச்சாமி அரசியலில் காலடி எடுத்துவைத்த பின்னர் தொழிலை தனது பெயருக்கு முன்பாக போட்டு போஸ்டர் முத்துச்சாமியாக அடைமொழியுடன் தனக்குதானே விளம்பரம் செய்துவந்தார். இவர் mypolls.in என தனி இணையதளம் தொடங்கி அதனை நிர்வகித்து தன்னை பற்றிய தகவல்களை அப்டேட் செய்துவருகிறார். இவருக்கு வழக்கறிஞர் குழுவும் உள்ளது. இந்நிலையில் தேர்தல் வேட்புமனு தாக்கலின் முதல்நாளே சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முதல் வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்புமனுக்கு போஸ்டர் இல்லாமல் வந்த போஸ்டர் முத்துச்சாமி வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் எளிய குடும்பத்தில் ஓர் சுயேட்சை ஜனநாயக அத்து மீறலை எதிர்த்து மதுரை வேட்பாளர் போஸ்டர் முத்துச்சாமி என்ற வாசகம் அடங்கிய போஸ்டரை எடுத்துவந்து பந்தாவாக போஸ் கொடுத்துவிட்டு அன்ன நடையாக தனது சகாக்களுடன் நடந்து வீட்டிற்கு திரும்பிசென்றார். வேட்புமனு தாக்கலுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போஸ்டர் முத்துச்சாமி. : நாட்டில் ஜனநாயக அத்துமீறல் எங்கெல்லாம் நடைபெறுகிறதோ அதற்கு எதிராக முதல் குரலாக என் குரல் இருக்கும், செங்கல்பட்டு அரசு பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி முகநூல் பதிவற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டது. கண்டிக்கதக்கது. இதனை திரும்ப பெற வேண்டும், அனைத்து கட்சியினரும் ஜனநாயக தூணை அசைத்துபார்க்கின்றனர். வயநாட்டில் ராகுலகாந்த தகுதி நீக்கம் ஜனநாயக படுகொலை, நாட்டில் தற்போது ஜனநாயகப்படுகொலை அதிகரித்து நடைபெறுகிறது இதனை தடுத்து ஜனநாயகம் மிளரவும், மகளிர் உரிமை நிலை நாட்டவும் தேர்தலில் போட்டியிடுகிறேன் எனவும், ஏற்கனவே நாடாளுமன்ற சட்டமன்ற தொகுதி தேர்தல்களில் போட்டியிட்டுள்ளேன் என்றார்.

Tags:    

Similar News