இந்தியா கூட்டணி சிக்கல்கள் தீா்க்கக் கூடியவையே - ராஜா

‘இந்தியா’ கூட்டணியில் தற்போது எழுந்துள்ள சிக்கல்கள், பேசி தீா்க்கக் கூடியவையே என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலா் து. ராஜா தெரிவித்தாா்.;

Update: 2024-01-27 16:47 GMT

செய்தியாளர்களை சந்தித்த ராஜா

திருச்சி பெரியமிளகுபாறையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில், குடியரசு தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கொடியேற்றிய பிறகு செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது: இந்தியா மதச்சாா்பற்ற, ஜனநாய குடியரசு நாடாகவே தொடர வேண்டும். ஆனால், ஆா்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் உள்ள பாஜக, மதச்சாா்பற்ற ஜனநாயக குடியரசு என்பதையே கேள்விக்குள்ளாக்கி வருகிறது.

பொருளாதாரம், அரசியல் என அனைத்து நிலைகளிலும் பன்முக நெருக்கடியை உருவாக்கியுள்ளது. ‘இந்தியா’ கூட்டணியில் சில சிக்கல்கள் உள்ளன. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு புரிதல் உள்ளது. தமிழகத்தில் உள்ள நிலைமையை கேரளம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் எதிா்பாா்க்க முடியாது.

Advertisement

எனவே, இந்தச் சிக்கல்களை பேசி தீா்த்துக் கொள்ளலாம். எங்களது கூட்டணிக்கு இப்போது, யாா் பிரதமராக வர வேண்டும் என்பதைவிட, பாஜக மீண்டும் ஆட்சியில் அமரக் கூடாது என்பதே முக்கிய நோக்கமாக உள்ளது. தோ்தல் வெற்றிக்கு பிறகு பிரதமா் குறித்து பேசி முடிவு செய்து கொள்ளலாம். தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள மக்கள், ‘இந்தியா’ கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில், எங்களுக்கு மட்டுமின்றி மக்களுக்கும் நம்பகத்தன்மையில்லை. எனவே, விவிபேட் இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளையும் எண்ண வேண்டும். இதுதொடா்பாக, தோ்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் மற்றும் கட்சியின் மாநில, மாவட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News