பாஜகவிற்கு மறைமுக ஆதரவு - கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் ராஜினாமா
கர்நாடக மாநிலத்தில் அதிமுகவிற்கு வாக்கு வங்கி இருந்தும் போட்டியிடாமல் எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு மறைமுக ஆதரவளித்து வருவதாக கூறி அம்மாநில அதிமுக செயலாளர் குமார் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில், கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் S.D.குமார் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் அப்போது: கர்நாடகா மாநிலத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா காலம் முதல் அதிமுக போட்டியிட்டு வருகிறது..ஆனால் எடப்பாடி பழனிசாமி பொதுசெயலாளரான பின்பு அதிமுக போட்டியிடவில்லை கடந்த சட்டமன்ற தேர்தலின்போது அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்று பாஜகவிற்கு ஆதரவளிப்பதாக கூறினார்.
ஆனால், இந்த தேர்தலில் அதிமுக தொண்டர்கள் யாருக்கு வாக்களிப்பது, எந்த கட்சியை ஆதரிப்பது என குழப்பத்தில் உள்ளனர்.. கர்நாடகா மாநில தேர்தலில் போட்டியிட நான் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் விருப்பமனுக்களை வழங்கி இருந்தோம், ஆனால் கர்நாடகா மாநில தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.வெற்றி வாய்ப்பில்லை என எடப்பாடி கூறுகிறார்.
கர்நாடகா மாநிலத்தில் 2 சட்டமன்ற உறுப்பினர்கள், 9 மாமன்ற உறுப்பினர்களை வென்றிருந்த அதிமுகவால் வெற்றி பெற முடியாதா? ஒற்றை தலைமை என வலியுறுத்தியவர்களில் நானும் ஒருவன். ஆனால் இபிஎஸ் கூட்டத்தை கூட்டி முடிவெடுப்பதாக கூறுகிறார்.அப்படியானால் இது ஒற்றை தலைமையல்ல, கூட்டுத்தலைமை என்பது தான் பொருள்.வேலியே பயிரை மேய்ந்த கதையாக கட்சியை அழிக்கின்ற செயல் இந்த கட்சியில் நடப்பதால் கட்சியை விட்டு விலகவில்லை ஆனால் எனது மாநில செயலாளர் என்கிற பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.கர்நாடகா மாநிலத்தில் அதிமுக போட்டியிடாத நிலையில் எடப்பாடி பழனிசாமி பாஜக குறித்தும், டெல்லி குறித்தும் பேசாததால் பாஜகவிற்கு அதிமுக மறைமுக ஆதரவு என்பது நிதர்சணமான உண்மை என்றார்