சோத்துப்பாறை அணையில் தேசிய அணைகள் பாதுகாப்புக் குழுவினர் ஆய்வு

சோத்துப்பாறை அணையின் தரம் குறித்து தேசிய அணைகள் பாதுகாப்புக் குழு தென் மண்டல தலைவர் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2024-06-13 06:46 GMT

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலைகள் இரண்டை இணைத்து கட்டப்பட்ட அணை சோத்துப்பாறை அணையாகும் . கொடைக்கானல் பேரிஜம் ஏரியிலிருந்து தண்ணீரானது வழிந்தோடி இந்த அணையில் வந்து சேர்கின்றது . பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகின்றது .

இதற்கான பணிகள் 1982 ம் ஆண்டு துவங்கபட்டு 1997 ம் ஆண்டு இந்த அணை கட்டி முடிக்கப்பட்டது. மொத்தம் 126.28 அடி அளவு கொண்ட இந்த அணை சுற்றுலாத்தலமாக இருந்து வருகின்றது . இந்நிலையில் இன்று சோத்துப்பாறை அணையின் தரம் குறித்து தேசிய அணைகள் பாதுகாப்பு குழு தென் மண்டல தலைவர் அஜய் குமார் சின்ஹா தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர் .

இந்த ஆய்வில் சோத்துப்பாறை அணையின் கட்டிட உறுதித் தன்மை , வெள்ளப்பெருக்கு காலங்களில் அணையின் பாதுகாப்பு மேம்பாடு குறித்தும் ஆய்வு செய்து பொதுப்பணித்துறை  அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டுறிந்தனர்.  இதனை தொடர்ந்து சோத்துப்பாறை அணையின் சுரங்க பாதைக்குள் சென்று பார்வையிட்டனர். பொதுப்பணித்துறை (நீர்வளத்துறை) உதவி செயற்பொறியாளர் சௌந்தரம் , உதவி பொறியாளர் கமலக்கண்ணன் உள்ளிட்ட பொதுப்பணிதுறையினர் உடன் இருந்தனர் .

Tags:    

Similar News