ஆதார் எண்ணை இணைக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் பி.எம்., கிசான் திட்டத்தில் 17வது தவணை தொகை பெற, விவசாயிகள் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைப்பது அவசியம் என உதவி இயக்குநர் தெரிவித்தார்.
கள்ளகுறிச்சி அருகே ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் பி.எம்., கிசான் திட்டத்தில் 17வது தவணை தொகை பெற, விவசாயிகள் இ-கே.ஒய்.சி., மற்றும் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைப்பது அவசியம் என உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார். ரிஷிவந்தியம் வேளாண்மை உதவி இயக்குநர் ஷியாம்சுந்தர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளின் ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்தொகை 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் என பிரித்து வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் இதுவரை 16வது தவணை உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சில வாரங்களில் 17வது தவணை தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. ஆனால், ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்குட்பட்ட 67 வருவாய் கிராமங்களை சேர்ந்த 987 விவசாயிகள் இ-கே.ஒய்.சி., பதிவேற்றம் செய்யாமல் உள்ளனர். அதேபோல், 668 விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்காமல் உள்ளனர். எனவே, விவசாயிகள் அனைவரும் உடனடியாக இ-கே.ஒய்.சி., பதிவேற்றுமாறும், ஆதார் எண்ணை வங்கி கணக்கில் இணைக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.