பள்ளி திறப்பதை முன்னிட்டு பாடநூல்கள் அச்சியிடும் பணி தீவிரம் !

தனியாக பாடநூல்கள் பெற வேண்டும் என்றால் , சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், அடையாறு பாடநூல் விற்பனை கிடங்கில் பெற்றுக்கொள்ளலாம். மொத்தம் 4.18 கோடி பாடநூல்கள் அச்சிடப்பட்டுள்ளது.

Update: 2024-06-01 11:13 GMT

 பாடநூல்கள் 

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 10 ஆம் தேதி தமிழகத்திலுள்ள பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதையடுத்து, 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடநூல்களை பள்ளிகளுக்கு அனுப்பும் பணிகளை கடந்த வாரம் பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் உள்ள 45,921 அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளியில் சுமார் 66 லட்சம் 82 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர்.

இவர்களுக்கான பாடநூல்கள் அச்சிடும் பணியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள்கழகம் மேற்கொண்டு வருகிறது. அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு குறைந்த விலையிலும் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி வரும் 2024-25 கல்வியாண்டுக்கான அரசு, அரசு உதவி பள்ளி மாணவர்களுக்கு வழங்க 2.9 கோடி புத்தகங்கள், தனியார் பள்ளிகள் விற்பனைக்கு ரூ.1.2 கோடி புத்தகங்கள் மொத்தம் 4.18 கோடி பாடநூல்கள் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் மாவட்டங்களில் உள்ள கிடங்குகளில் பாடநூல் புத்தகங்கள் இருப்பு வைக்கப்பட்டன. நாளைக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகங்களை அனுப்பும் பணி மேற்க்கொள்ளப்படும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. அச்சிடப்பட்ட பாடநூல்கள் குடோன்களில் இருந்து அனுப்பப்பட்டு வருவதாகவும், பள்ளி தலைமை ஆசிரியர்கள் சென்று பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாங்கி செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர தனியார் பள்ளி மாணவர்களுக்கான பாடநூல்கள் விற்பனையும் நடைபெற்று வருகிறது. சென்னையில் நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், அடையாறு பாடநூல் விற்பனை கிடங்கு ஆகியவற்றில் புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த ஆண்டு தரமான சீருடைகளை மாநகராட்சி பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மாணவர்களுக்கு அவர்களின் அளவுகளுக்கு ஏற்றவாறு சீருடைகளுக்கு அளவெடுக்கும் பணி ஏப்ரல் மாதமே தொடங்கிய நிலையில், பள்ளிகள் திறக்கும் போது தரமான சீருடைகள் வழங்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

Tags:    

Similar News