வட்டியில்லா மானிய கடன் - சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை

காற்றாலை, சூரிய ஒளி மின்சாரம் அமைக்க பொது சுத்திகரிப்பு நிலையங்ளுக்கு மானியத்துடன் வட்டியில்லா கடன் அளிக்க வேண்டும் என சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-06-10 03:56 GMT

திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன்

திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது புதியதாக அமைகிற ஒன்றிய அரசு சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும். பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்கும் தரத்தை கொடுப்பதற்காக சாய ஆலைகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நவீன எந்திரங்களுக்கு மானியம் கொடுக்க வேண்டும். ஜவுளித்துறையின் கீழ் ஏற்கனவே 31-3-2022 வரை செயல்பாட்டில் இருந்த ஏ.டி.யு.எப். திட்டத்தை போல புதிய மானிய திட்டத்தை 1-4-2022 முதல் பின் தேதியிட்டு விரைவில் அறிவிக்க வேண்டும்.

பின்னலாடை தொழிலில் ஏற்பட்டுள்ள சரிவை சரி செய்யும் வகையிலும், பொருளாதார இழப்புகளை சரி செய்யவும் சிறு, குறு மற்றும் நடுத்தர சாய ஆலைகளுக்கு கூடுதலாக குறைந்த வட்டியில் வங்கிகள் கடன் வழங்க வழிவகை செய்ய வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பூஜ்ஜியநிலை சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தை இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த திட்டத்தை சிறப்பாக செய்து வரும் திருப்பூர் பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கார்பட் கிரெடிட்டை போன்று வாட்டர் கிரெடிட் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும். பொது சுத்திகரிப்பு நிலையங்களில் சாயக்கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய ஆகும் செலவில் 40 சதவீதம் மின்சாரத்திற்கு மட்டும் செலவாகிறது. இந்த மின்சார செலவினை குறைத்தால், பொது சுத்திகரிப்பு நிலைய உறுப்பினர் சாய ஆலைகளின் உற்பத்தி செலவும் குறையும். எனவே பொது சுத்திகரிப்பு நிலையங்களில் காற்றாலை அல்லது சூரிய ஒளி மின்சார திட்டங்களை நிறுவுவதற்கு மானியத்துடன் கூடிய வட்டியில்லா கடன் வழங்க வேண்டும். கோவையில் இருந்து செயல்படுத்தப்படும் மெட்ரோ ரெயில் திட்டத்தை திருப்பூர் வரை நீட்டித்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News